தமிழ் இலக்கியம் மற்றும் கல்வெட்டுகளில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளது
தமிழ்நாடு மற்றும் சவுராஷ்டிரா இடையேயான ஆயிரம் ஆண்டுகள் பழமையான உறவு உள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழ்நாடு மற்றும் சவுராஷ்டிரா இடையே தொடர்பை மீட்டெடுக்கும் வகையில் 'சவுராஷ்டிரா தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி, குஜராத் மாநிலத்தில் நாளை மறுதினம் முதல் 26-ம் தேதி வரை மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. இதற்காக, மதுரையில் இருந்து குஜராத் விராவல் நகர் வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த நிலையில், மதுரையிலிருந்து புறப்பட்டு வந்த சிறப்பு ரயிலை, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் ரவி, 'தமிழ்நாடு மற்றும் சவுராஷ்டிரா இடையே உள்ள தொடர்புகள் குறித்து, தமிழ் இலக்கியம் மற்றும் கல்வெட்டுகளில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளது. தமிழகத்தில் இருக்கும் சவுராஷ்டிரா மக்கள் தங்களது வேர்களைத் தேடி செல்லும் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகியுள்ளது' என்றார்.
மேலும், இது தொடர்பாகத் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தனது ட்விட்டரிலும் பதிவிட்டுள்ளார். அதில், 'தமிழ்நாட்டின் பல ஆயிரம் சகோதர சகோதரிகள் தங்களின் ஆயிரம் ஆண்டுகள் தொடர்பை இணைக்கச் சௌராஷ்டிராவிற்குக் கலாசார யாத்திரை மேற்கொண்டுள்ளனர். அவர்களின் உற்சாகம் மிக்க முதல் குழு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கொடியசைத்து அனுப்பி வைக்கப்பட்டது.
பாரதத்தின் இயல்பான கலாசார ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் காசி தமிழ் சங்கமம், சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் ஆகியவற்றை வழங்கிய தொலைநோக்குப் பார்வை மிக்கப் பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றி' என தெரிவித்துள்ளார்.