'தமிழில் சி.ஆர்.பி.எப். தேர்வு' - அமித் ஷா அறிவிப்பை வரவேற்ற முதலமைச்சர் ஸ்டாலின்
நான் எழுதிய கடிதத்தின் விளைவாக மத்திய அரசு இந்த முடிவு எடுத்துள்ளது
தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் சி.ஆர்.பி.எப். தேர்வு நடத்தப்படும் என மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ரிசர்வ் காவல் படையில் 9,223 இடங்களுக்கான ஆட்சேர்க்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் அறிவிப்பு தமிழ்நாட்டின் இருந்து இத்தேர்விற்கு விண்ணப்பிப்போரின் நலனுக்கு முற்றிலும் எதிராக உள்ளதாகவும், இது தன்னிச்சையானது மட்டுமல்லாமல் பாகுபாடு காட்டக்கூடியதும் என்று மத்திய உள்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் கடிதம் எழுதி இருந்தார்.
மேலும், இந்தி பேசாத மாநில இளைஞர்களுக்கு சி.ஆர்.பி.எப் உள்ளிட்டவற்றில் பணியாற்ற சமவாய்ப்பு பெறும் வகையில் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தேர்வை நடத்துவதற்கு ஏதுவாக அறிவிக்கையில் மாற்றங்களைச் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு நாடு முழுவதும் ஜன.1ம் தேதி சி.ஆர்.பி.எப். தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வு இந்தி, ஆங்கிலம் மட்டுமின்றித் தமிழ் உள்பட 15 மொழிகளில் நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.
இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாவது, மத்திய அரசின் அனைத்து தேர்வுகளையும் தமிழ் மற்றும் பிற மாநில மொழிகளில் நடத்த வேண்டும். நான் எழுதிய கடிதத்தின் விளைவாக மத்திய அரசு இந்த முடிவு எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது' என்று தெரிவித்துள்ளார்.