கொழுக்கட்டையும் வழங்கப்படவில்லை என, குழந்தைகள் குற்றம்சாட்டியதால் நடவடிக்கை
குழந்தைகளுக்கு உணவு சமைக்காமல் ஜாலியாகக் கதை பேசிக்கொண்டிருந்த அங்கான்வாடி பணியாளர்களைச் சஸ்பெண்ட் செய்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் டி.மணல்மெடு பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையம் உள்ளது. கடந்த ஏப்.13ம்தேதி காலை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆக்கூர் ஆரம்பச் சுகாதார நிலையத்தை ஆய்வு செய்யச் சென்றார். அப்போது வழியில் இருந்த குறிப்பிட்ட அங்கன்வாடி மையத்தை ஆட்சியர் மகாபாரதி திடீரென விசிட் செய்தார்.
அப்போது அங்கே மைய பணியாளர் ரமா, உதவியாளர் லதா ஆகிய இருவரும் ஹாயாக அமர்ந்து சிரித்துப்பேசியபடி இருந்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ந்துபோன மாவட்ட ஆட்சியர் ‘மதியம் 12 மணிக்கு மேல் ஆகிறது. இதுவரை மதிய உணவு சமைக்கவே தொடங்கவில்லை. எப்போது தொடங்கி குழந்தைகளுக்கு எப்போது சாப்பாடு போடுவீர்கள்? என்று கேட்டதற்கு அவர்களிடமிருந்து முறையான பதில் ஏதும் இல்லை.
குழந்தைகளை அழைத்து விசாரித்தபோது, அன்றைய தினம் காலையில் வழங்கப்படும் கொழுக்கட்டையும் வழங்கப்படவில்லை. இதுபோல் பல நாட்கள் உணவு போடுவதில்லை’ என்று சொல்ல, கடுப்பான ஆட்சியர் சமைக்க வைத்துள்ள உணவுப்பொருட்களை ஆய்வு செய்துள்ளார்.
அப்போது அதில் பூச்சிகளும், வண்டுகள் இருந்தது தெரிந்து, ‘இந்த உணவுப் பொருட்களைத்தான் சமைப்பதற்குப் பயன்படுத்துகிறீர்களா?’ எனக் கேள்வி எழுப்பியதோடு, ஆத்திரம் குறையாத ஆட்சியர் இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்திரவிட்டார். மேலும், அவர்களுக்குப் பதிலாக வேறு பணியாளர்களை உடனே நியமித்துக் குழந்தைகளுக்கு உணவு சமைத்து பரிமாறும்படி அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.