தூத்துக்குடி: 'மாலை போட போனால் அடிக்கறாங்க' - போலீஸ் மீது பாயும் பட்டியலின அமைப்புகள்

தூத்துக்குடி: 'மாலை போட போனால் அடிக்கறாங்க' - போலீஸ் மீது பாயும் பட்டியலின அமைப்புகள்
தூத்துக்குடி: 'மாலை போட போனால் அடிக்கறாங்க' - போலீஸ் மீது பாயும் பட்டியலின அமைப்புகள்

‘இது தலித் சமுதாய மக்களை அடக்க நினைக்கும் அடக்கு முறை’ என குற்றச்சாட்டு

டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த ஏப்.14 ஆம் தேதி தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்குப் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

எப்போதையும்விட இந்த முறை அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க அரசியல் கட்சியினர் மத்தியில் ஆர்வம் அதிகமாக இருந்தது தெரிந்தது. அதைவிடப் பல்வேறு பட்டியலின அமைப்புகள் மேள, தாளங்களுடன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர்.

சத்யா நகர், ராஜபாண்டி நகர், அமுதா நகர் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வீலிங் செய்து கொண்டு வந்தனர். அதைப் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அதனால் கோபமான இளைஞர்கள், போலீஸ் அதிகாரிகளைப் பார்த்து கைநீட்டி எச்சரிக்கும் விதமாகக் குரல் கொடுத்தனர். அதனால் கடுப்பான காவல்துறை அந்த இளைஞர்களை விரட்டும் வகையில் லேசாகத் தடியடி நடத்தி விரட்டி விட்டனர்.

இந்த நிலையில், நாளை 16 ஆம் தேதி வீரன் சுந்தரலிங்கத்தின் 253 ஆவது பிறந்த நாள் விழா வருகிறது. ஓட்டப்பிடாரம் கவர்னகிரியில் இருக்கும் சுந்தரலிங்கத்தின் மணிமண்டபத்தில் இருக்கும் அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.

ஓட்டப்பிடாரம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமுதாய இளைஞர்கள் இந்த நிகழ்ச்சியை மிகப் பெரிய விழாவாக நடத்தி வருகிறார்கள். ஆண்டுதோறும் இளைஞர்கள் தீபம் ஏந்தி ஓடி வருவது வழக்கம். இந்த வருடம் கூடுதலாக மாட்டுவண்டி பந்தயம் நடத்த தீர்மானித்து இருந்தார்கள். 

இந்த நிலையில், நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் எஸ்.பி பாலாஜி சரவணன். "தீபம் ஏந்தி நீண்ட தூரம் ஓடி வர தடை விதிக்கப்படுகிறது. மாட்டுவண்டி பந்தயம் நடத்தக் கூடாது. கலை நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது. மாலை 6 மணிக்கு நிகழ்ச்சிகளை முடித்துவிட வேண்டும்" என்று ஏகப்பட்ட தடைகளை விதித்திருந்தார். 

இது பட்டியலின சமுதாய இளைஞர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபற்றி தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜ.க செயலாளர் லிங்கராஜிடம் கேட்டதற்கு. "பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டையில் இருக்கும் ஜக்கம்மாள் கோயில் விழாவின்போது மாற்று சமுதாயத்தினர் பெரும் திரளாகக் கலந்துகொள்கிறார்கள். 

நள்ளிரவு வரை இளைஞர்கள் தீபம் ஏந்தி வருகிறார்கள். மாட்டுவண்டி பந்தயம் நடைபெறுகிறது. கலை நிகழ்ச்சிகள் நள்ளிரவு வரை நடைபெறுகிறது. ஆனால் வீரர் சுந்தரலிங்கத்தின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு மட்டும் போலீஸ் தடை விதிக்கிறது. இது பட்டியலின சமுதாய மக்களை அடக்க நினைக்கும் அடக்கு முறையாகும்" என்றார்.

போலீஸ் எஸ்.பி. பாலாஜி சரவணன், "மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னையைக் காக்க வேண்டியது காவல்துறையின் கடமை. அதனால் வீரன் சுந்தரலிங்கம் பிறந்தநாள் விழாவில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது யாரையும் அடக்குவதற்காக அல்ல" என்கிறார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com