கிருஷ்ணகிரியில் காதல் திருமண விவகாரத்தில் இருவர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், மக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அருணபதி கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது தாய் கண்ணம்மாள். தண்டபாணியின் மகன் சுபாஷ். இவர், திருப்பூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார்.
அதே கம்பெனியில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த அனுசுயா என்கிற பெண் வேலை செய்து வந்துள்ளார். சுபாஷ், அனுசியா ஆகிய இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இந்த நிலையில் சுபாஷ், அனுசியா ஆகிய இருவரும் நட்பாகப் பழகி வந்துள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இதுகுறித்து சுபாஷ் தனது பெற்றோருக்கு தெரிவித்து திருமணம் செய்து வைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது. தனது மகன் சுபாஷ் மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து வருவதை அறிந்த தண்டபாணி கடும் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.
இதன் காரணமாக மகன் சுபாஷுக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என்றும், இளம்பெண்ணை விட்டுவிட்டு தனியாக வீட்டுக்கு வருமாறும் தண்டபாணி அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிலையில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த மாதம் 27 ஆம் தேதி சுபாஷ் தனது காதலி அனுசுயாவை திருமணம் செய்துள்ளார். இதை அறிந்த தண்டபாணி அவர்களை ஏற்றுக்கொள்வதாகக் கூறி நைசாக வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த சுபாஷ் தனது மனைவி அனுசுயாவை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார். இன்று சுபாஷ் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, தனது மகன் என்றும் பாராமல் அவரை தண்டபாணி கத்தியால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாய் கண்ணம்மாள் மற்றும் அனுசுயா ஓடி வந்து தட்டிக் கேட்டபோது அவர்களையும் தண்டபாணி சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் கண்ணம்மாள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மருமகள் அனுசுயா கதறி கூச்சலிட்டு கத்தியுள்ளார். இவரது அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அனுசுயாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அனுசியா கவலைக்கிடமாக உள்ள நிலையில் அவரிடம் நீதிபதிகள் மரண வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுபாஷ் மற்றும் அவரது பாட்டி கண்ணம்மாளின் சடலங்களை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தண்டபாணியை தேடி வருகின்றனர்.