நீலகிரியில் அனுமதி பெறாமல் வனப்பகுதியில் சாலை அமைத்த விவகாரத்தில் 3 பேர் சிக்கியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரியில் மேடநாடு பகுதி என்பது நகர் பகுதியில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆள்நடமாட்டம் இல்லாத இப்பகுதியில் சுற்றுலாத் துறை அமைச்சரின் மருமகனுக்கு சொந்தமான தேயிலைத் தோட்டம் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த எஸ்டேட்டுக்கு போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்தும் நோக்கில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை பணிகள் நடந்துள்ளது. இதை பலநாட்களாக கண்டுகொள்ளாமல் இருந்த வனத்துறையினர் அந்த சாலை பணிகள் முடியும் வரை காத்திருந்துள்ளனர்.
ஒருகட்டத்தில் அத்துமீறல் வெளியில் தெரிய துவங்கியதும் கடந்த 11ம் தேதி வனத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக சாலை விரிவாக்கம் செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும் அனுமதி பெறாமல் நடைபெற்ற பணியில் ஈடுபட்ட எஸ்டேட் மேலாளர், கனரக இயந்திர ஓட்டுனர்கள் 2 பேர் என மொத்தம் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் சட்டவிரோத பணிக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது , ‘சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான தனியார் தேயிலைத் தோட்டம் இந்த பகுதியில் இருக்கிறது. இவரது தோட்டத்துக்கு சாலையை இணைக்கும் வகையில் வனப்பகுதியில் கைவிடப்பட்ட சாலையை வனத்துறை அனுமதி பெறாமல் தடை செய்யப்பட்ட இயந்திரங்களை கொண்டு பணிகளை செய்துள்ளனர்.
வனச்சட்டத்தின் அடிப்படையில் தோட்ட மேலாளர் பாலமுருகன், ரோடு ரோலர் ஓட்டுநர்கள் உமர் பரூக், பங்கஜ்குமார் சிங் ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். தோட்ட உரிமையாளரான சிவக்குமாருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது’ என்றனர்.
அனுமதியில்லாமல் சாலை அமைத்ததாக கூறி மேலாளர் மற்றும் வாகன ஓட்டுனர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ள வனத் துறையினர் எஸ்டேட் உரிமையாளருக்கு விளக்க நோட்டீஸ் மட்டும் அளித்துள்ள செயல் இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சாலை விரிவாக்கப் பணியில் மரங்களை வேரோடு பெயர்க்கும்போது ஏற்பட்டுள்ள குழிகளில் யானைக் குட்டிகள் விழுந்து விடும் அபாயம் உள்ளதால் வனத்துறையினர் இந்த சாலையின் குழிகளை உடனே மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.