பஞ்சாப் மாநிலத்தில் வீர மரணம் அடைந்த யோகேஷ் குமார் உடலுக்கு அரசு மரியாதை வழங்க கோரி உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பஞ்சாப் மாநிலத்தில் வீர மரணம் அடைந்த யோகேஷ் குமார் உடலுக்கு அரசு மரியாதை வழங்க கோரி உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் கடந்த 13ம் தேதி காலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். இதில் சேலம் மாவட்டம் மேட்டூர் வனவாசி அருகே உள்ள பனங்காட்டை சேர்ந்த கமலேஷ் மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த யோகேஷ்குமார் ஆகிய 2 தமிழர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இந்நிலையில் உயிரிழந்த வீரர்களின் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்தவகையில் யோகேஷ் குமாரின் உடல் நேற்று பஞ்சாபில் இருந்து விமானம் மூலமாக மதுரைக்கு கொண்டுவரப்பட்டது.
அங்கு ராணுவ வீரர் யோகேஷ் குமாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சொந்த ஊரான தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மூனாண்டிபட்டிக்கு யோகேஷ் குமாரின் உடல் கொண்டு வரப்பட்டது.
அங்கு ரெங்கநாதர் கோவில் மைதானத்தில் கூடியிருந்த கிராம மக்கள் மலர் அஞ்சலி செலுத்திய பின்னர் அவரது வீட்டிற்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர். அவரது இல்லத்தில் வைத்து அவரின் திரு உடலுக்கு கம்பம் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் அவரது உடலை சமுதாய முறைப்படி நல்லடக்கம் செய்ய தயாரானபோது உரிய ராணுவ மரியாதை இல்லாததால் ராணுவ மரியாதை வழங்கும் வரை நல்லடக்கம் செய்ய மாட்டோம் என்று கூறி உறவினர்கள் இல்லத்தின் நுழைவு வாயிலில் அமர்ந்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனே, போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் இறுதி ஊர்வலம் தொடங்கியது. அப்போது தேவாரம் பகுதியில் சித்திரை திருவிழா நடந்து வரும் நிலையில் யோகேஷ் குமாரின் இறுதி ஊர்வலத்திற்காக சிறிது நேரம் நிகழ்ச்சிகளை நிறுத்தி வைத்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி, வழி அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர், அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. யோகேஷ் குமாரின் உயிரிழப்பிற்கு மூனாண்டிபட்டி கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். ராணுவ வீரரின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்படாத நிலையில் பாதுகாப்பு காரணத்திற்காக டி.எஸ்.பி தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.