தண்ணீரினுள் விழுந்த யானைக்குட்டி வெளியே வர முடியாமல் நீரில் மூழ்கி இறந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இந்தியாவில் யானைகள் அதிகம் காணப்படும் வனங்களில் கோவை மாவட்டமும் ஒன்று. அதே வேளையில் யானைகள் அகாலமாய் மரணத்தை சந்திக்கும் வனங்களிலும் இதுவே முக்கியமானதாக சுட்டிக்காட்டப்படுகிறது. அதிலும் பெரியநாயக்கன் பாளையம் வனச்சரகத்தில் மட்டும் கடந்த நான்கு மாதங்களில் நான்கு யானைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் பாலமலையை ஒட்டிய நாயக்கன்பாளையம் கிராமத்தில் வன எல்லையிலிருந்து நூற்று இருபது மீட்டர் தொலைவில் அபராஜிதா என்பவருக்கு சொந்தமான பண்ணை வீடு ஒன்று பட்டா நிலத்தில் உள்ளது.
வனத்தை ஒட்டி அமைந்துள்ளதால் இந்த வீட்டின் பின்புறமுள்ள தரை தொட்டியில் நீர் குடிப்பதற்காக யானைகள் அடிக்கடி வருவது வழக்கம். அதிலும் இப்போது கோடை வெயில் கொளுத்தும் நிலையில், தண்ணீர் தேடி யானைகள் வன எல்லைகளை கடந்து ஊர்ப்பக்கம் வரத் துவங்கியுள்ளன. அந்த வகையில் இந்த பண்ணை வீட்டுக்கு தினமும் நீர் குடிக்க யானைகள் வந்து சென்றுள்ளது.
இந்த நிலையில், கடந்த 11ம் தேதி மாலையில் இந்த பண்ணை வீட்டில் பணிபுரியும் நபர் ஒருவர், பராமரிப்பு பணிக்காக நீர் தொட்டி அருகே சென்றுள்ளார். அப்போது, கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. உடனே லைட் அடித்து பார்த்தபோது யானைக்குட்டி ஒன்று இறந்து கிடப்பது தெரிய வந்தது. உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
மறுநாள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் அந்த தொட்டியின் கான்கிரீட் மேல் மூடி உடைத்து அகற்றப்பட்டு, யானைக்குட்டியின் பிரேதம் வெளியே எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. தண்ணீரினுள் விழுந்த யானைக்குட்டி வெளியே வர முடியாமல் நீரில் மூழ்கி இறந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் யானைக்குட்டியின் இறப்பை மையமாக வைத்து வன உயிரின ஆர்வலர்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர். அதாவது, இரண்டுக்கு இரண்டு நீள அகலமுள்ள அந்த தொட்டியினுள் சுமார் ஒன்றரை மாத வயதுடைய பருத்த யானைக்குட்டி விழுந்தது எப்படி? யானைகளுக்கு பிறவியிலேயே நீந்தும் குணம் இருந்தும் அந்த குட்டி யானை எப்படி மூழ்கியது?
இதையெல்லாம் தாண்டி, யானைகள் தங்களின் குட்டிகளை உயிரைவிட மேலாக பாவிக்கக் கூடியவை. தன் உயிரைக் கொடுத்தும்கூட குட்டியை காக்கும் பழக்கமுடையவை. தொட்டிக்குள் குட்டியை விழவே விட்டிருக்க வாய்ப்பில்லை. அதையும் மீறி அது விழுந்திருந்தாலும் தங்களின் தும்பிக்கையை உள்ளே விட்டு யானைக்குட்டியை வெளியே இழுக்க போராடியிருக்கும். அப்படியும் மீட்க முடியவில்லை என்றால் எத்தனை நாட்கள் ஆகியிருந்தாலும் அந்த இடத்தை விட்டு நகராமல் நின்று சாதித்திருக்கும். இதுதான் யானைகளின் இயல்பு. அப்படி இருக்கையில் யானைக்குட்டி உள்ளே விழுந்த நிலையில் மற்ற யானைகள் நீர் குடித்துவிட்டு கிளம்பியது என்ற தகவலை ஏற்க முடியவில்லை என்கின்றனர் யானை ஆர்வலர்கள்.
மேலும், குட்டி விழுந்து இரண்டு மூன்று நாட்கள் ஆகியிருக்கும் என்கிறார்கள். காரணம் உடல் உப்பி, அழுக துவங்கி தொட்டிக்குள் நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. அப்படி கெட்டுப்போன நீரை, குட்டியின் பிணம் கிடைப்பதற்கு முந்தைய நாள் இரவில்கூட யானைக்கூட்டம் வந்து குடித்துள்ளது என்பதை ஏற்கவே முடியாது. யானைகள் மிக நுணுக்கமான, உணர்ச்சிபூர்வமான ஓர்உயிரினம். இப்படி பிரேதத்தின் கழிவுகள் கலந்த நீரை அவை குடிக்காது.
இதையெல்லாம் தாண்டி, பண்ணை வீட்டில் உள்ளவர்கள் யானைகளுக்கு ரெகுலராக குடிநீரை தங்கள் தரைத் தொட்டியின் மூலம் வழங்கியுள்ளார்கள். இதற்கு அனுமதித்தது யார்? என்னதான் பட்டா நிலம் என்றாலும் வனத்திற்கு இவ்வளவு அருகில் இவ்வளவு பெரிய பண்ணை வீடு கட்ட அனுமதித்தது எப்படி?
இந்த வீட்டின் உரிமையாளர், நடிகர் சத்யராஜின் தங்கை. நடிகர்களின் குடும்பம் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? பண்ணை வீட்டின் ஒரு எல்லையில் வாட்ச் டவர் கட்டி வைத்துள்ளனர். தனியார்கள், இப்படியான கட்டுமானங்களை கட்டி வனத்தை கண்காணிக்க அனுமதி அளித்தது யார்?
வன விலங்குகள் எந்த நேரத்திலும் உள்ளே நுழைகிற வகையில் இந்த வீடு அமைந்திருப்பது அந்த வீட்டைச் சேர்ந்த மனிதர்களுக்கும் தானே ஆபத்து? இந்த வீட்டின் அமைப்பில் மட்டுமல்ல யானைக்குட்டி அந்த தொட்டியினுள் தவறுதலாக விழுந்ததாக சொல்லப்படுவதிலும் சந்தேகம் உள்ளது. எனவே வனத்துறை முழுமையான விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்கிறார்கள்.
இதையடுத்து, பண்ணை வீட்டின் உரிமையாளரும் நடிகர் சத்யராஜின் தங்கையுமான அபராஜிதாவிடமும் அவரது கணவர் ராஜேந்திரனிடம் இந்த சம்பவம் பற்றி நேரில் சந்தித்து விளக்கம் கேட்டோம். வீடியோ பேட்டி வேண்டாம் என்று தவிர்த்த ராஜேந்திரன் “இந்த வீடு கட்டி பத்துப் பதினோறு வருஷமா இப்படி எந்த பிரச்னையும் நடந்ததில்லை. ஆனா இப்படியொரு சம்பவம் எங்களை ரொம்பவே பாதிச்சிடுச்சு. இது பக்கா பட்டா நிலம், எந்தவித விதிமீறலும் இல்லாமல்தான் வீட்டை கட்டியிருக்கோம். யானை உள்ளிட்ட வன விலங்குகள் காம்பவுண்டுக்குள்ளே வந்து சேதம் பண்றப்ப கூட நாங்க ஆத்திரப்பட மாட்டோம். மீண்டும் அதை சரி பண்ணி வெச்சுக்குவோம் அவ்வளவுதான்'' என்கிறார்,
தொடர்ந்து பேசும்போது, '' யானைங்க தாகத்துக்கு தண்ணீர் எடுத்துக்க வசதியா இந்த கீழ் நிலை தொட்டியை எப்பவும் நீர் நிரப்பியே வெச்சுக்குவோம். இந்த தொட்டிக்குள்ளே எப்படி அந்த குட்டி போய் விழுந்துச்சுன்னு ஆச்சரியமும், அதிர்ச்சியுமா இருக்குது.
எங்க வீட்டுல வளர்க்கிற நாய்களை கழுதை புலி வந்து கவ்வி, தூக்கிட்டு போயிடுறது தொடர் சம்பவமா இருந்துச்சு. அதுங்க நாயோட கழுத்தை கவ்வாத மாதிரி காலர் போட்டுவிடுமாறு வனத்துறை கூறியது. இப்ப காலர் மாட்டிவிட்டு பாதுகாக்குறோம். எங்களுக்கு அசெளகரியமா இருக்குதேன்னு ஒரு நாளும் வன விலங்குகளுக்கு எதிராக நாங்க யோசிச்சதோ, நடந்ததோ இல்லை.
சத்யராஜ் அடிக்கடியெல்லாம் இங்கே வர மாட்டார். கோவை சிட்டியில் உள்ள வீட்டுக்கு மட்டுமே வருவார், தங்குவார், உடனே கெளம்பிடுவார். இங்கே எப்பவாச்சும் வருவார். நாங்களும் அப்படித்தான். நியூ இயர் டைம் மாதிரி இங்க வருவோம். இருப்போம், போயிடுவோம். இந்த வீட்டை பெருசா யூஸ் பண்றதில்லை.
சத்யராஜ் பேரை சொல்லிட்டு சில நடிகர்கள் இங்கே தங்க அனுமதி கேட்பாங்க, ஆனால், அவர் சொன்னால் மட்டுமே ஓப்பன் பண்ண முடியும்னு சொல்லிடுவோம். நமக்கு எதுக்கு வம்பு? நாங்க வன விலங்குகளை எங்க குடும்பம் போல நேசிக்குறோம், இங்கே தங்குறவங்களும் அப்படி இருப்பாங்கன்னு சொல்ல முடியுமா? எங்க குடும்பத்துல இருக்கற சின்ன பிள்ளைங்க யானைகள், யானைக்குட்டிகளுக்கு செல்லப் பேர் வெச்சு கூப்பிடுற அளவுக்கு அன்பை காட்டுறவங்க. அப்படிப்பட்ட வீட்ல இப்படியொரு சம்பவம்” என்கிறார்.
இதுதொடர்பாக, கோவை மாவட்ட வன அலுவலரான ஜெயராஜிடம் பேசியபோது “நடந்தது மிக துரதிர்ஷ்டமான சம்பவம். குட்டியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டிருக்குது, விரிவான ரிசல்ட் வந்ததும் முழு விபரமும் கிடைக்கும். யானை குட்டி இறந்த தகவல் கேள்விப்பட்டதுமே வந்து களத்தில் இறங்கிட்டோம். இந்த வீட்டுக்குள் யானைகள் வந்து தண்ணீர் குடிக்கிற பழக்கம் இருந்தாலும், அதுங்க இங்கே வர்றதுக்கு முன்னாடியே வனத்தினுள்ளேயே தண்ணீர் குடிக்கிற மாதிரி தொட்டிகள் வெச்சிருக்கோம், அதில் நீர் நிரப்புறோம். அதையும் தாண்டி வந்திருக்குதுங்க. கடும் கோடையிலும் நாங்க விடாமல் தண்ணீர் சப்ளை தந்துட்டிருக்கோம். ஆனால் சில யானைகள் இப்படி வந்துடுது.
குட்டி யானையின் உடல் கிடந்த தொட்டியை இடிச்சு, முழுமையா மூட உத்தரவிட்டோம். அந்தத் தொட்டியை மூடிவிட்டோம். இனி அந்த தொட்டி இருக்காது. நான் சமீபத்தில்தான் இந்த மாவட்டத்துக்கு வந்திருக்கேன், விரிவாக விசாரித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.
இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சூழல் ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
- ஷக்தி