சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
சென்னை ஐ.ஐ.டியில் தொடர்ந்து வரும் மாணவர்கள் தற்கொலை சம்பவம் தொடர்பாக, குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியர்களை உடனே சஸ்பெண்ட் செய்யவேண்டும் என வலியுறுத்தி ஐ.ஐ.டி. மாணவர்கள் நேற்று இரவு 8 மணி முதல் தற்போது வரை தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை ஐ.ஐ.டியில் கொரோனா காலகட்டத்திற்கு பின்னர் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதில், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதில், கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி மேற்கு வங்கத்தை சேர்ந்த சச்சின் குமார் ஜெயின் என்கிற ஆராய்ச்சி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். மாணவர் சச்சின் குமார் ஜெயின் தற்கொலை குறித்து கோட்டூர்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால், மாணவர் சச்சின் குமார் ஜெயின் தற்கொலைக்கு அவரது பேராசிரியர் ஒருவர் தான் காரணம் என மாணவர்கள் குற்றம் சாட்டினர். மாணவர்கள் தற்கொலை விவகாரத்தில், சரியான விசாரணை மேற்கொள்ளாத ஐ.ஐ.டி. நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் நேற்று இரவு முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் சென்னை ஐ.ஐ.டியின் இயக்குனர் காமகோடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால், உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால், மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.