ராஜேந்திர பாலாஜி தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல உச்ச நீதிமன்றம் தடை விதித்து இருந்தது
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர், ஆவின் நிறுவனத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி, மூன்று கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக அவர் மீது பலரும் புகார் தெரிவித்தனர். இதனால், ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார்.
ராஜேந்திர பாலாஜியை காவல்துறை தேடிவந்த நிலையில், கிருஷ்ணகிரி அருகே அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில், ராஜேந்திர பாலாஜி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.
அப்போது, சம்பந்தப்பட்ட காவல் நிலைய எல்லையைத் தாண்டி எங்கும் செல்லக்கூடாது என்று ராஜேந்திர பாலாஜிக்கு நீதிமன்றம் நிபந்தனை விதித்தது. ராஜேந்திர பாலாஜி தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
விருதுநகர் மாவட்டத்தை விட்டு வெளியே செல்லும்போது விசாரணை அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் என்றும், ஜாமீன் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டாலும் பாஸ்போர்ட்டை அவரிடம் கொடுக்கக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தனது ஜாமீன் நிபந்தனை முழுவதையும் தளர்த்த கோரி, உச்ச நீதிமன்றத்தில் மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்தார். ஆனால், ராஜேந்திர பாலாஜி மீதான லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை முடிய 6 மாதங்கள் வரை ஆகும் என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, இந்த விவகாரத்தில் விரைவாக விசாரணை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், 6 மாதங்கள் வரை ராஜேந்திர பாலாஜியை கைது செய்யத் தடையை நீட்டித்து உத்தரவிட்டனர். மேலும், தமிழ்நாட்டை விட்டு ராஜேந்திர பாலாஜி வெளியே செல்லும் கோரிக்கையை நிராகரித்தனர்.