'உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில்தான் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது' என முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்
வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தில் கால நீட்டிப்பு செய்யப்பட்டது ஏன்? என்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீதம் இடஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இது தொடர்பாக, பரிந்துரை செய்வதற்கு, பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட காலக்கெடுவை மேலும் 6 மாதங்களுக்கு, தமிழக அரசு நீட்டித்துள்ளது. இது தொடர்பாக பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
இந்த தீர்மானத்தின் மீது பா.ம.க. சட்டமன்ற தலைவர் ஜி.கே.மணி பேசினார். அப்போது, '10.5 இடஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்து 3 மாதத்திற்குள் அறிக்கை கொடுக்கவேண்டும் என ஆணையத்திற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டது. தற்போது 6 மாதங்களுக்கு கால நீட்டிப்புச் செய்யப்பட்டது ஏன்?' என்று கேள்வி எழுப்பியவர்,
'வரும் கல்வியாண்டில் இடஒதுக்கீடு அமல்படுத்தவி்ல்லையென்றால் மருத்துவ படிப்பு மற்றும் அண்ணா பல்கலைகழகத் தேர்வுகளில் இட ஒதுக்கீடு பெறமுடியாமல் போய்விடும் என்றும், ஒரு மாதத்திற்குள் கொண்டு வரவேண்டும்' என்று வலியுறுத்தி பேசினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'தி.மு.க. ஆட்சியில் எப்படி 69 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தோமோ, அதேபோல இதையும் கொண்டுவர முயற்சி செய்வோம். 10.5 சதவீதம் எந்த நிலையில் கொண்டுவரப்பட்டது என்று உங்களுக்குத் தெரியும். தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அவசர அவசரமாக 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு கொண்டு வந்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
எங்களை பொறுத்தவரை யார் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்று பார்க்கவில்லை. தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்த உடனே 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வன்னிய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கருதியே, உடனே அமல்படுத்தும் முயற்சியில், ஈடுபட்டு வருகிறோம்.
மேலும், உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான பணியில் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. மூன்று மாத காலத்திற்குள் பணியை நிறைவேற்றவில்லை என்பதால்தான், காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது' என விளக்கம் கொடுத்தார்.