திருச்சியில் உள்ள காப்பகத்தில் 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை பகுதியில் குழந்தைகளுக்கான ஆதரவற்றோர் காப்பகம் (சாக்கீடு) செயல்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் விட்டு செல்லப்படும் தொட்டில் குழந்தைகள், சாலையோரம் வீசப்படும் பிறந்த பிஞ்சு குழந்தைகள் இந்த காப்பகத்துக்கு கொண்டு வந்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறாக சுமார் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த மாதம் தடுப்பூசி செலுத்தியபோது ஒவ்வாமை ஏற்பட்டும், மூச்சுத் திணறல் காரணமாகவும் 8 குழந்தைகள் திருச்சி அரசு மருத்துவமனை குழந்தைகள் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டன.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை 57 நாட்களே ஆன ஒரு பெண் குழந்தை மற்றும் 3 மாதமான ஒரு பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தன. மீதம் உள்ள 6 குழந்தைகளுக்கு தற்போது மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 3 மாத ஆண் குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.