ஆய்வாளர் வசந்தி, காவல்துறை பணியில் இருந்து நிரந்தர நீக்கம் செய்து மதுரை சரக டி.ஐ.ஜி உத்தரவிட்டுள்ளார்.
2021ம் ஆண்டு ரூ.10 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில் சிக்கிய, நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் பணியாற்றிய ஆய்வாளர் வசந்தி, காவல்துறை பணியில் இருந்து நிரந்தர நீக்கம் செய்து மதுரை சரக டி.ஐ.ஜி உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்த வர் அர்ஷத். பேக் தயாரிக்கும் தொழில் புரியும் இவர், தனது வியாபாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்க 2021 ஜூலை 5ம் தேதி ரூ.10 லட்சத்துடன் மதுரைக்கு வந்தார். இதன்பின், நாகமலை புதுக்கோட்டை பகுதியிலுள்ள தனது நண்பர் ஒருவரை பார்க்கச் சென்றார் . அப்போது, நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளராக பணிபுரிந்த வசந்தி என்பவர் அவருக்கு தெரிந்த பால்பாண்டி, பாண்டி யராஜன், உக்கிரபாண்டி, சீமைச்சாமி ஆகியோருடன் சேர்ந்து ஆய்வு என்ற அடிப்படையில் அர்ஷத் வைத்திருந்த ரூ.10 லட்சத்தை பறித்துள்ளனர். காவல் நிலையத்திற்கு சென்று அர்ஷத் பணத்தை திருப்பிக் கேட்டபோது, பொய் வழக்கு போடுவேன் என, வசந்தி மிரட்டியுள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட அர்ஷத் அப்போதைய மதுரை காவல் கண்காணிப்பாளிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வசந்தி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து 2 மாதமாக தலைமறைவாக இருந்த வசந்தியை கோத்தகிரி தனியார் விடுதியில் வைத்து தனிப்படையினர் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வழக்கை எதிர்கொண்டார்.
இந்நிலையில், வசந்தி தனது வழக்கு தொடர்பான சாட்சிகளை மிரட்டியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், இது தொடர்பாக மிரட்டுக்குள்ளான நபர் மதுரை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன்பேரில் அவர் மீது வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது. தென் மண்டல ஐஜி அஸ்ராக கார்க் ஆலோசனையின் பேரில், இவ்வழக்கில் அவரை கைது செய்ய திருவில்லிபுத்தூர் டிஎஸ்பி சபரிநாதன் தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது.
மதுரை ஊமச்சிகுளம் பகுதியிலுள்ள வசந்தியின் வீட்டுக்கு இன்று காலை தனிப்படையினர் சென்றனர். வெளியே செல்ல முயன்ற அவரை போலீசார் சுற்றி வளைத்தனர். இருப்பினும், அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது, பெண் காவல்துறை அதிகாரிகள் குண்டு கட்டாக தூக்கியும், இழுத்துச் சென்றும் வசந்தியை கைது செய்து வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீஸார் கூறுகையில், ‘ஏற்கெனவே கைதாகி ஜாமீனிலுள்ள ஆய்வாளர் வசந்தி சாட்சிகளை கலைக்கும் நோக்கில் மிரட்டுவது தவறு. இது குறித்த புகாரின்பேரில், வழக்கு பதியப்பட்டு அவரை கைது செய்துள்ளோம்’ என்றனர். இந்நிலையில், ஆய்வாளர் வசந்தி, காவல்துறை பணியில் இருந்து நிரந்தர நீக்கம் செய்து மதுரை சரக டி.ஐ.ஜி உத்தரவிட்டுள்ளார்.