உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என தகவல்
பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ முகாமில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் தேனியை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார். இதனால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர்.
தேனி மாவட்டம், தேவாரம் அருகே உள்ளது மூணாண்டி பட்டி கிராமம். இங்கு வசித்து வருபவர் ஜெயராஜ் ரத்தினம் தம்பதியர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். மகன் யோகேஷ் குமார் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் இணைந்து பணியாற்றி வந்தார்.
தற்போது பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ மையத்தில் பணியாற்றி வந்த நிலையில் நேற்று மதியம் 2 மணிக்கு யோகேஷ் குமாரின் பெற்றோருக்கு ராணுவ மையத்திலிருந்து அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில், லோகேஷ் குமார் துப்பாக்கி சூட்டில் மரணம் அடைந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதனால், யோகேஷ் குமாரின் பெற்றோர், உடன்பிறந்த சகோதரிகள் மற்றும் ஊர்மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இன்று மாலை அவரது உடல் சொந்த ஊரான மூணாண்டிப்பட்டிக்குக் கொண்டு வரப்படும் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில் பெற்றோர், உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சோகத்துடன் காத்திருக்கின்றனர். ராணுவ முகாமில் மரணம் அடைந்த யோகேஷ் குமாரின் உடல் சொந்த ஊருக்குக் கொண்டு வந்த பின்னர் உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று ஊர் பொதுமக்கள் வருத்தத்துடன் கூறினர்.
ராணுவத்தில் இருந்த யோகேஷ் குமாருக்கு தற்போது திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்ததும், குடும்பத்தில் இவர் ஒரே மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இளம் ராணுவ வீரர் மரணமடைந்த செய்தி அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.