கந்திலி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கில் தந்தையை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், கந்திலி அருகே கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார் (30). டிராக்டர் டிரைவர். இவருக்கும், ஜல்லியூர் கிராமத்தை சேர்ந்த சத்யா (25) என்பவருக்கும், கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. இவர்களுக்கு ஆஷிகா (5).இலக்கியா (3), மித்ரா (எ) வேண்டாமணி (ஒன்றரை வயது) என மூன்று மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாகக் கணவன், மனைவி இடையே தகராறு இருந்து வந்தது. இதனால் கடந்த சனிக்கிழமை தம்பதியர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.இதன் காரணமாகக் கணவனிடம் கோபித்துக் கொண்ட சத்தியா தனது மூத்த மகளான ஆஷிகாவை மட்டும் அழைத்துக் கொண்டு தாய் வீட்டிற்குச் சென்றார்.
இரவு வெகு நேரமாகியும் சத்யா வீடு திரும்பாததால் ஆத்திரமடைந்த சிவகுமார் தன்னுடயை இரு குழந்தைகளுக்கும் பாலில் விஷம் கலந்து குடிக்க வைத்து, தானும் விஷம் குடித்துள்ளார்.சிறிது நேரத்தில் இளைய மகள் வேண்டாமணி துடிதுடித்துப் பரிதாபமாக இறந்தார். மேலும் இலக்கியா மயக்கமடைந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிவக்குமார் நள்ளிரவில் அருகே உள்ள உறவினர்களுக்குச் செல்போனில் தொடர்பு கொண்டு குழந்தைகளுக்கு விஷம் கலந்த பால் குடிக்க வைத்து தானும் குடித்ததாகக் கூறியுள்ளார். தகவலறிந்த கந்திலி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் அங்குச் சென்று மயக்க நிலையில் இருந்த, சிவக்குமார் மற்றும் இலக்கியாவை மீட்டு சிகிச்சைக்காகத் திருப்பத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்த வேண்டாமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இது தொடர்பாகக் கந்திலி போலீசார் தனது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கில் சிவக்குமாரை நேற்று கைது செய்தனர்.