தி.மு.க-வின் ஊழல் பட்டியல் நாளை வெளியிடப்படும் என, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருப்பது தமிழக அரசியல் களத்தில் அனலை கிளப்பி உள்ளது.
தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 'DMK FILES' என்ற திமுகவின் ஊழல் பட்டியல் நாளை காலை 10.15 மணிக்கு வெளியிடப்படும் என அறிவித்துள்ளார்.
தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது கையில் கட்டியிருக்கும் கடிகாரம் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கேள்வி எழுப்பி அதன் விலை குறித்து கேட்டிருந்தார். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி இருந்தது.
இதற்கு பதிலளித்த அண்ணாமலை ‘கடிகாரத்தின் பில் மற்றும் திமுக அமைச்சர்கள் செய்த ஊழல்கள் ஏப்ரல் 14 ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிடப்படும்’ என்று தெரிவித்து இருந்தார். இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘திமுக கோப்புகள் (DMK Files) குறித்த விவரம் நாளை காலை 10.15 மணிக்கு வெளியாகும்’ என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அண்ணாமலையின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட காணொலியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, எம்.பி கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, தயாநிதிமாறன், கலாநிதிமாறன் உள்பட முதலமைச்சரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்களின் படங்கள் இடம் பெற்றுள்ளன. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.