எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை இருட்டடிப்புச் செய்வதற்கு எதிர்ப்பு
சட்டப்பேரவையில் நேற்று நேரமில்லாத நேரத்தின்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே நடந்த சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார். எடப்பாடி பழனிசாமியின் இந்தப் பேச்சு நேரலை செய்யப்படவில்லை என்று அதிமுகக் கொறடா எஸ்.பி. வேலுமணி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், சட்டப்பேரவையின் பிரதான எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுகள் தொடர்ந்து நேரலையில் காட்டுவதில்லை என்று தெரிவித்தார். இதற்குப் பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, ’இது தொடர்பாகப் பேரவை உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி என்னிடம் கூறி இருக்கிறார். நான் பேரவை செயலாளரிடம் இது சம்பந்தமாக விசாரிக்கச் சொல்லி இருக்கிறேன்’ என்று தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய எஸ்.பி. வேலுமணி, எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சை நேரடி ஒளிபரப்பு செய்யாததைக் கண்டித்து வெளிநடப்புச் செய்வதாகக் கூறினார். இதன் பின்னர் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் பேசும்போது நேரலை செய்யப்படுவது இல்லை. நான் பேசும்போதும் நேரலை செய்யவில்லை என்று தெரிவித்தார். இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பேசுவதை நேரடி ஒளிபரப்பு செய்யாததற்கும், எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை இருட்டடிப்புச் செய்வதற்கும் எதிர்ப்புத் தெரிவித்துச் சட்டப்பேரவைக்கு அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் இன்று கருப்பு மாஸ்க் அணிந்து வந்தனர். இதனால் பேரவை வளாகத்தில் பரபரப்பாக காணப்பட்டது.