மயிலாடுதுறையில் கோவிலில் கைவரிசை காட்டிய 'செவ்வாய்கிழமை' திருடன் போலீஸ் வலையில் சிக்கியுள்ளான்.
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது. நவக்கிரகங்களில் செவ்வாய்க்கு உரிய ஸ்தலமாக பிரசித்தி பெற்று விளங்குகிறது. திருமண தடை உள்ளவர்கள் செவ்வாய்க் கிழமையன்று இந்த ஸ்தலத்திற்கு வந்து செவ்வாய் பகவான் அங்காரகனை வழிபட்டு தோஷ நிவர்த்தி செய்வது வழக்கம்.
இப்படி செவ்வாயன்று மட்டும் ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து செல்வது வழக்கமாக உள்ளது. இவ்வாறாக செவ்வாய்கிழமைகளில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பலர் அடிக்கடி தங்களது பணம், நகைகளை காணவில்லை என வைத்தீஸ்வரன்கோவில் போலீசில் புகார் அளித்து வந்தனர்.
போலீசாரும் செவ்வாய்க்கிழமையன்று கோவிலுக்கு வந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தாலும் திருட்டு சம்பவம் மட்டும் குறையவில்லை. எனவே ‘என்ன செய்வது?’ என யோசித்த போலீசார் செவ்வாய்க் கிழமையன்று மட்டும் ஏற்கனவே கோவிலுள்ள கண்காணிப்பு கேமராக்களுடன் மேலும் சில கேமராக்களை கூடுதலாக அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது அம்பாள் சன்னதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு நபர் சுற்றித்திரிந்ததை போலீசார் பார்த்துள்ளனர். இதையடுத்து அந்த நபரை மடக்கிப்பிடித்து தீவிரமாக விசாரித்தபோது முன்னுக்குபின் முரணாக பேசியுள்ளார். இதன் பின்னர் போலீசார் தங்கள் ஸ்டைலில் விசாரித்தபோது பிடிபட்டவர் திருச்சி உறையூரைச்சேர்ந்த ஆனந்தன் eன்பதும், செவ்வாய்க்கிழமையன்று மட்டும் வைத்தீஸ்வரன்கோவில் வந்து திருடுவதை வழக்கமாக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தனை கைது செய்து சிறையிலடைத்தனர்.
இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் கூறும்போது, ‘மற்ற தினங்களில் கோவிலில் எந்த விழா நடைபெற்றாலும் திருட்டு சம்பவங்கள் எதுவும் இருக்காது. ஆனால் குறிப்பாக செவ்வாய்க் கிழமைகளில் மட்டும் குறிவைத்து திருடி வந்த ஆனந்தனை பொறி வைத்து நாங்கள் பிடித்தோம்’ என்றார்.
- ஆர்.விவேக் ஆனந்தன்