தஞ்சாவூர்: குடிநீர் இல்லாமல் தவிக்கும் மக்கள் - காத்திருப்பு போராட்டத்தால் பரபரப்பு

தஞ்சாவூர்: குடிநீர் இல்லாமல் தவிக்கும் மக்கள் - காத்திருப்பு போராட்டத்தால் என்ன பலன்?
தஞ்சாவூர்: குடிநீர் இல்லாமல் தவிக்கும் மக்கள் - காத்திருப்பு போராட்டத்தால் பரபரப்பு

குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் போலீசாரின் வாக்குறுதியை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா தொண்டராயன்பட்டி ஊராட்சி விச்சலூர்படுகை கிராமத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள அனைவரும் பட்டியல் இனத்தைச் சார்ந்த மக்கள் ஆவார்கள். 

அய்யனாபுரம் செல்லும் சாலையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது விச்சலூர்படுகை கிராமம். இந்த கிராமத்துக்கு செல்லும் சாலையானது மேடு பள்ளமாகவும், கரடுமுரடான சாலையாகவும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. 

இந்த சாலையானது ஆனந்தகாவேரி கரையின் வழியாகத்தான் இந்த ஊருக்கு செல்லும் வழி உள்ளது. இந்த கிராமத்தில் ஒரு குடிநீர் மேல்நிலை தொட்டி மட்டுமே உள்ளது. இந்த தொட்டியில் இருந்து ஆறு மாதங்களாக குடிநீர் வினியோகம் இல்லாததால் சுமார் இரண்டு கிலோ மீட்டர் நடந்து சென்று அய்யனாபுரம் செல்லும் சாலையில் அமைந்துள்ள காவேரி கூட்டுக்குடிநீர் தொட்டியில் இருந்து அப்பகுதி கிராம மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் எடுத்து வருகின்றனர். 

இதனால் நாள்தோறும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருவதால் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் தொடர்ந்து கோரிக்கை மனு அளித்து வந்துள்ளனர். இதையடுத்து குடிநீர் குழாய் இணைப்பு பதியப்பட்டு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு மாத கணக்காகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

பதியப்பட்ட இணைப்பு குழாய் மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு இணைப்பு கொடுக்கப்படாமல் பாதியிலேயே வேலை நிறுத்தப்பட்டுள்ளதால் தற்போது கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகுந்த தவிப்புக்கு உள்ளாகி  வருகின்றனர். மேலும் இந்த கிராமத்தில் கழிப்பறை வசதியும் செய்து தரப்படாமல் உள்ளது. எனவே இந்த கோரிக்கைகளை முன்வைத்து கடந்த மாதம் பட்டினிப் போராட்டம் நடத்த போவதாக கிராம மக்கள் தெரிவித்திருந்தனர்.

இதை முன்னிட்டு பூதலூர் வட்டாட்சியர் தலைமையில் கடந்த மார்ச் மாதம் 6ம் தேதி ஊராட்சி ஒன்றிய ஆணையர், ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின்போது அப்பகுதி கிராம மக்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி உடனடியாக கிராம மக்களுக்கு குடிநீர் வழங்குவது என, முடிவெடுக்கப்பட்டு இரண்டு நாட்கள் மட்டும் செய்யும் வாகனத்தில் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. 

அதன் பின்னர் இன்று வரை குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் தங்களுக்கு குடிநீர் கிடைக்கும் வரை தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். அதன்பின், போலீசார் பேச்சுவார்தை நடத்தினர். அதிகாரிகளின் வாக்குறுதியை ஏற்று கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com