தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதற்கு XBB.1.16 வைரஸ்தான் காரணம் என்று கூறப்படுகிறது.
கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பரவலாக அதிகரித்து வருகிறது. பலி எண்ணிக்கை அதிகம் இல்லை எனினும் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை நாடு முழுக்க 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 7 மாதங்களில் முதல் முறை நாடு முழுக்க கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தையும் கடந்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா கடந்த 3 நாட்களுக்கு முன் 6 ஆயிரம் என்ற நிலையை அடைந்த நிலையில் நேற்று 8 ஆயிரத்தை நெருங்கியது.
இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி இந்தியா முழுக்க 10, 154 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளர். மொத்தம் 4,42,10,127 பேர் இதுவரை குணமடந்துள்ளனர். 5,356 பேர் இன்றைய நிலவரப்படி குணமடைந்துள்ளனர்.
சமீபத்தில் XBB.1 மற்றும் XBB.1.15 வைரஸ்கள் உலகம் முழுக்க பல நாடுகளில் பரவியது. முக்கியமாக சீனாவில் இதன் பரவல் அதிகமிருந்தது. ஆனால் இந்தியாவில் XBB.1 மற்றும் XBB.1.15 வைரஸ்களால் பெரிதளவு பாதிப்பு இல்லை. இந்த நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதற்கு XBB.1.16 வைரஸ்தான் காரணம் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாட்டிலும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 5,093 மாதிரிகளை பரிசோதனை செய்ததில் 432 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஒருவர் தமிழ்நாட்டில் உயிரிழந்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,489 ஆக அதிகரித்து இருக்கிறது. இன்று கொரோனாவால் குணமடைந்து 243 பேர் வீடு திரும்பி இருக்கிறார்கள் என மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது. மேலும், மாஸ்க் அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு வலியுறுத்தப்படுகிறது.