சென்னை ஐ.ஐ.டி-யில் தொடரும் தற்கொலைகளுக்கு நீதி கோரி மாணவர்கள் விடிய விடிய போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை ஐ.ஐ.டி-யில் மாணவர்கள் தற்கொலை செய்வது தொடர்கதையாகி வருகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரையிலும் 12 தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்து இருப்பதாக மாணவ மாணவிகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு மட்டும் 4 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் 3 பேர் மாணவர்கள் ஒரு மாணவி ஆவார். இதனை தொடர்ந்து கடந்த 21 ஆம் ஆண்டு பாதி எரிந்த நிலையில் மாணவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த விசாரணையில் கேரளாவை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் என்பதும், அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதேப்போன்று கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவை சேர்ந்த மாணவர் ஒருவர் வருகைப் பதிவேடு போதிய அளவுக்கு இல்லாததால் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்பட்டது.
அதேப் போல் கடந்த மாதம் சென்னை ஐ.ஐ.டி-யில் மகாராஷ்டிராவை சேர்ந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இவ்வாறாக கடந்த 2 மாதத்தில் மட்டும் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக கூறப்படுவது மாணவ மாணவிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பரபரப்பான சூழலில் சென்னை ஐ.ஐ.டி-யில் முனைவர் பட்டத்துக்காக ஆராய்ச்சி மேற்கொண்டு வந்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த சச்சின் குமார் என்ற மாணவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வேளச்சேரியில் உள்ள தனது வாடகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக வேளச்சேரி காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என மாணவர்கள் மத்தியில் புகார் எழுந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்னை ஐ.ஐ.டி வளாகம் முன்பாக ‘சச்சின் மரணத்திற்கு நீதி வேண்டும்’ என்கிற கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பியபடி விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஐ.ஐ.டி நிர்வாகம் மாணவ மாணவிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. நிர்வாகம் தரப்பில் ‘சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கு முயற்சித்து வருகிறோம்.
இதுபோன்ற சம்பவம் தொடர்பாக விசாரிக்க மாணவப் பிரதிநிதிகள் உள்ளிட்ட நிலையான விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே போராட்டத்தை கைவிட வேண்டும் என உறுதி அளித்ததாகவும் அதை ஏற்க மறுத்த மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.