நாமக்கல் மாவட்டத்தில் மாணவிகளை படம் எடுத்த ஆசிரியரை கைது செய்ய விடாமல் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் ஆவேசம் காட்டினர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள கீரம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 120க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் பன்னீர்செல்வம் என்பவர் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் ஆசிரியர் பன்னீர்செல்வம் பள்ளியில் பயிலும் மாணவிகளை ஆபாசமாக செல்போனில் போட்டோ, வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.
பள்ளிக்கு வந்த பெற்றோர்கள் சம்மந்தப்பட்ட ஆசிரியரின் செல்போனை வாங்கிப் பார்த்தபோது அதில் மாணவிகளின் படங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து 50க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் அரசு பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் ‘சமூக அறிவியல் ஆசிரியர் பன்னீர்செல்வத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தபடி ஆவேசம் காட்டினர். இதனால் ஆசிரியர் பன்னீர்செல்வத்தை பள்ளியின் தலைமையாசிரியர் சர்மிளா பாதுகாப்பாக அறையில் வைத்து பூட்டிவிட்டு பரமத்தி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் மற்ற ஆசிரியர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு விரைந்து வந்த போலீசாரிடமும் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சம்மந்தப்பட்ட ஆசிரியர் பன்னீர்செல்வம் இருந்த அறையை திறக்க முயன்றனர்.
இதையடுத்து நாமக்கல் கூடுதல் காவல் துனைகண்கானிப்பாளர் மணிமாறன், பரமத்திவேலூர் டி.எஸ்.பி கலையரசன் தலைமையிலான போலீசார் தொடர்ந்து பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சதீஷ்குமார் அங்கு வந்து, பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது ‘பள்ளி ஆசிரியர் பன்னீர்செல்வத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர், கல்வித்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வர வேண்டும்’ எனக் கோரி ஆசிரியரை காவல் நிலையத்துக்கு அழைத்து செல்ல விடாமல் முற்றுகையிட்டனர். அதையும் மீறி ஆசிரியர் பன்னீர்செல்வத்தை அழைத்துச் செல்லும்போது போலீசாரின் வாகனத்தை பள்ளியிலிருந்து வெளியே செல்ல விடாமல் தடுத்தனர்.
இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது ‘ஆசிரியர் பன்னீர்செல்வம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என உறுதி அளித்ததையடுத்து போலீஸ் வாகனம் செல்ல வழிவிட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.