பா.ஜ.க. - தி.மு.க. தொண்டர்களிடையே 'மோதல்' ஏற்படும் சூழல் நிலவியது
சென்னை பல்லாவரத்தில் பல்வேறு நலத்திட்டங்களைப் பிரதமர் மோடி நாட்டிற்கு அர்பணிக்கும் நிகழ்வில், 'மோடி வாழ்க' - 'பெரியார் வாழ்க' - என்ற கோஷம் எதிரொலித்தது. இதனால், பா.ஜ.க. - தி.மு.க. தொண்டர்களிடையே 'மோதல்' ஏற்படும் சூழல் நிலவியது.
இந்த விழாவில் பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் தி.மு.க. தலைவர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர். அப்போது மணி சரியாக மாலை 5.30 மணி. ஒவ்வொரு தலைவர்கள் வரிசையாக வருகை தந்தனர். விழா மேடை அருகே பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச்.ராஜா வருகை தந்தார். அவரைப் பார்த்தவுடன் டென்சன் ஆன தி.மு.கவினர் சிலர், 'தந்தை பெரியார் வாழ்க' எனக் கோஷமிட்டனர். அவர்களுடன் மேலும் சில தி.மு.கவினர் இணைந்து கொண்டு பெரியார் கோஷத்தை வேகமாக முன்னெடுத்தனர்.
மேடை அருகே என்ன நடக்கிறது எனத் தெரியாமல் தவித்த, பா.ஜ.கவினருக்கு இந்த தகவல் தெரியவரவே, தி.மு.கவினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பா.ஜ.கவினர் ஒரு குழுவாக இணைந்து 'பாரத் மாதாவுக்கு ஜே' எனக் கோஷமிட்டனர். இதனால், அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. இதனால், அந்த இடத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
இதனிடையே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கான்வாய் அந்த இடத்திற்கு வந்துவிட்டது. இதனையடுத்து, தி.மு.க.- பா.ஜ.கவினரை அமைதிப்படும் முயற்சியில் காவல்துறையினர் மின்னல் வேகத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, ஹெச்.ராஜாவை இடம் மாற்றி அமரவைத்தனர். இதனால், பிரச்னை ஓய்ந்தது. காவல்துறையினரின் தீவிர முயற்சியால் அமைதி நிலவி வருகிறது.
- அபிநவ் உடன் கே.என்.வடிவேல்