'தமிழ் மொழியையும் தமிழ்க் கலாசாரத்தையும் நேசிக்கிறேன்' - பிரதமர் மோடி நெகிழ்ச்சி

'தமிழ் மொழியையும் தமிழ்க் கலாசாரத்தையும் நேசிக்கிறேன்' - பிரதமர் மோடி நெகிழ்ச்சி
'தமிழ் மொழியையும் தமிழ்க் கலாசாரத்தையும் நேசிக்கிறேன்' - பிரதமர் மோடி நெகிழ்ச்சி

தமிழகத்தின் உத்வேகம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது

சென்னை மெரினாவில் உள்ள விவேகானந்தர் இலத்திற்குச் சென்ற பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு விழாவில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், 'தமிழ் மொழி, தமிழ் கலாசாரத்தையும் மிகவும் நேசிக்கிறேன்' எனத் தெரிவித்தார்.

இன்று மாலை சென்னை வந்த பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்தில் ரூ. 2,467 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த விமான நிலைய முனையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். முன்னதாக விமான நிலையத்தில் புதிய முனையத்தைப் பிரதமர் மோடி பார்வையிட்டார். 

இதனையடுத்து, சென்னை - கோவை வழிதடத்தில் வந்தே பாரத் ரயிலை, சென்னை புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, பிரதமர் மோடி சென்னை மெரினாவில் உள்ள விவேகானந்தர் இல்லத்துக்குச் சென்றார். அங்குள்ள விவேகானந்தர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தார். மடத்தின் சார்பில் பிரதமர் மோடிக்கு, விவேகாந்தனர் சிலை பரிசளிக்கப்பட்டது.

இந்த நிலையில், பிரதமர் மோடி பேசியதாவது, 'ராமகிருஷ்ண மடத்தின் நிகழ்வில் பங்கேற்பதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன். தமிழ் மொழி, தமிழ் கலாசாரத்தையும் நான் மிகவும் நேசிக்கிறேன். காரணம், தமிழகத்தின் உத்வேகம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

காசிக்கும் தமிழகத்திற்கும் உள்ள பிணைப்பை காசி தமிழ் சங்கம் உணர்த்தியுள்ளது என்றால் அது மிகையல்ல. தமிழக இளைஞர்களுக்கு ராமகிருஷ்ண மடம் அன்று முதல் இன்று வரை நல்வழிகாட்டி வருகிறது. எப்படி என்றால், நவீன தொழில்நுட்பங்கள் மூலம் வழிகாட்டுகிறது. அனைவருக்கும் சமமான வாய்ப்பு அளிக்கவேண்டும். அப்போதுதான் நல்ல சமுதாயம் உருவாகும். சமுதாயம் முன்னேற்றம் அடையும்.

இந்தியா குறித்து, அப்படி ஒரு சிறப்பான தொலைநோக்கு பார்வையை விவேகானந்தர் கொண்டிருந்தார் என்று சொன்னால் அது மிகையல்ல. குறிப்பாக, பெண்கள் முன்னேற்றத்தை விவேகானந்தர் மிகவும் வலியுறுத்தி இருந்தார். அவரது வழிகாட்டுதலுடன், மத்திய அரசு வீறுநடை போடுகிறது. விவேகானந்தர் கண்ட கனவை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. விவேகானந்தர் கூறியது போலவே, பெண்கள் தங்களுக்கு முன்னால் உள்ள தடைகளை எல்லாம் தகர்த்து எறிந்து வருகின்றனர்' என்றார்.

இந்த நிகழ்வில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, சென்னை மயிலாப்பூர் ராம கிருஷ்ணா மடத்தின் 125-வது ஆண்டு விழா நிகழ்ச்சியிலும் பங்கேற்க இருப்பதாகவும், இந்த நிகழ்ச்சி மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடத்திலேயே நடப்பதாகவும் முதலில் திட்டமிட்டப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி, பிரதமர் மோடியும் அங்கு சென்று அந்த நிகழ்வில் பங்கேற்பதாக அட்டவணை தயாரிக்கப்பட்டது. 

ஆனால் மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் செல்லும் மிகவும் சாலை குறுகலாக உள்ளதாலும், நிகழ்ச்சி நடைபெறும் இடமும் மிகவும் சிறியதாக உள்ளது என்பதாலும், பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக மயிலாப்பூர் ராம கிருஷ்ணா மடத்துக்குப் பிரதமர் மோடி செல்லும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. 

இதற்குப் பதிலாக, ராமகிருஷ்ணா மடத்தின் 125-வது ஆண்டு விழா நிகழ்ச்சி விவேகானந்தர் இல்லத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com