‘இயற்கை உரம் கிலோ ரூ.10’ என தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் கூவிக்கூவி விற்பனை செய்தார்.
தஞ்சாவூர் மாநகராட்சியில் சுத்தமான, பசுமையான மற்றும் நீடித்த சுற்று சூழலை உறுதி செய்யும் விதமாக மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 14 கோட்டங்களிலும் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் சிறப்பு தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த முகாம்கள் தன்னார்வ அமைப்புகள், குடியிருப்போர் நலச் சங்கங்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் நடத்தப்படுகிறது. இன்று இரண்டாம் சனிக்கிழமையை முன்னிட்டு தஞ்சாவூர் கோட்டம் 8-ல் உள்ள யாகப்பா நகர் மெயின் ரோடு பூங்கா தெருவில் உள்ள பூங்காவில் தூய்மை பணி நடைபெற்றது.
மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் தலைமையில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலையில் இந்த தூய்மை பணி நடந்தது. இதில் பூங்காவில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது.
இதையடுத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, மோர் வழங்கப்பட்டது. இதேப் போல் தஞ்சை அழகி குளம் உள்ளிட்ட 14 கோட்டங்களிலும் பல்வேறு இடங்களில் தூய்மை பணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி, கவுன்சிலர் நீலகண்டன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பூங்காவில் உள்ள குப்பைகளை மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையர் ஆகியோர் வெறும் கைகளால் அள்ளி தூய்மை பணியில் ஈடுபட்டனர். இதன் பிறகு மாநகராட்சி பணியாளர்களால் தயாரிக்கப்பட்ட இயற்கை உரம் விற்பனை செய்யப்பட்டது. அப்போது மேயர் மற்றும் ஆணையர், ‘இயற்கை உரம் கிலோ பத்து ரூபாய்’ எனக் கூவிக் கூவி விற்பனையை தொடங்கி வைத்தனர். அப்போது அனைத்து பொட்டலங்களும் விற்பனை ஆனதை அடுத்து கிடைத்த பணத்தை கணக்கு பார்த்து மாநகராட்சி பணியாளரிடம் ஒப்படைத்தனர்.