சான்றிதழில் உண்மைத்தன்மை மறைப்பு: எல்.ஐ.சி-க்கு ரூ.2 லட்சம் அபராதம்

சான்றிதழில் உண்மைத்தன்மை மறைப்பு: எல்.ஐ.சி-க்கு ரூ.2 லட்சம் அபராதம்
சான்றிதழில் உண்மைத்தன்மை மறைப்பு: எல்.ஐ.சி-க்கு ரூ.2 லட்சம் அபராதம்

ஓய்வு காலப் பலன்கள் அனைத்தையும் 4 வாரத்திற்குள் வழங்க உத்தரவு

சான்றிதழின் உண்மைத் தன்மை ஏற்கனவே உறுதி செய்யப்பட்டதை மறைத்து வழக்கு தொடர்ந்த எல்ஐசி நிறுவனத்திற்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகாசியைச் சார்ந்த கொண்டரெட்டி என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் 1984 ஆம் ஆண்டு எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். அவர் பணியில் சேரும் பொழுது 1982 ஆம் ஆண்டு திருநெல்வேலி வருவாய்த்துறை அதிகாரிகள் கொடுத்த சாதிச் சான்றிதழை சமர்ப்பித்துப் பணியில் சேர்ந்தார். 

பணியில் சேர்ந்த பின் எல்.ஐ.சி அவருடைய சாதி சான்றிதழை சரிபார்க்க திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம் அனுப்பி உள்ளது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர், கார்த்திகேயனின் சாதிச்சான்றை சரி பார்த்து அது மெய்த்தன்மை உடையது என அறிக்கையை 20.4.1990ல் அளித்தார். 

இதற்கிடையில் கார்த்திகேயனுக்கும், அவரது சகோதரருக்கும் பதவி உயர்வு கிடைக்கப்பெற்றது. எனவே மீண்டும் இவரது சாதி சான்றினை சரிபார்க்க எல்.ஐ.சி முயற்சி மேற்கொண்டது. மாநில கூர்நோக்கு குழுவுக்குக் கடிதம் அனுப்பி இருவரின் சாதிச் சான்றையும் சரிபார்க்க எல்.ஐ.சி கேட்டுக்கொண்டது. 

அதனடிப்படையில், விசாரணை கடிதத்தைப் பெற்ற இவருடைய சகோதரர் ஏற்கனவே சரிபார்க்கப்பட்ட தனது கொண்டாரெட்டி சாதி சான்றை மீண்டும் சரி பார்ப்பது தவறு என 1997ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 

வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஏற்கனவே 1990ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியரால் சரிபார்க்கப்பட்ட ஜாதி சான்று மீண்டும் விசாரணைக்கு எல்.ஐ.சி அலுவலகம் அனுப்பியது தவறு. எனவே இந்த விசாரணை கடிதத்தை ரத்து செய்வதாகவும், ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் அளித்த உத்தரவை உறுதிபடுத்தியும் உத்தரவிட்டார்.

பின்னர், கார்த்திகேயன் பழங்குடி இனத்தைச் சார்ந்தவர் அல்ல என எல்.ஐ.சிக்குப் புகார் கடிதம் வந்ததாகக்கூறி அவரிடம் விளக்கம் கேட்டது. கார்த்திகேயன் ஜாதி சான்றிதழை சரிபார்க்க உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைகிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள்,"ஏற்கனவே கார்த்திகேயனின் சாதிச் சான்றிதழ் இரண்டு முறை உறுதி செய்யப்பட்டுள்ளது. பணி வழங்கும் அதிகாரி சாதி சான்றை ஒரு முறை சரி பார்த்து விட்டால் மீண்டும் மீண்டும் சரிபார்ப்பு என்ற பெயரில் தொந்தரவு கொடுக்க கூடாது.

கார்த்திகேயனின் சாதிச் சான்று ஏற்கனவே 1990 ஆம் ஆண்டுச் சான்று சரிபார்க்கப்பட்டு விட்ட நிலையில், தற்போது மீண்டும் அவரது சாதிச் சான்றை சரி பார்க்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் எல்.ஐ.சி வழக்குத் தொடுத்தபோது 1990 ஆம் ஆண்டுச் சரி பார்க்கப்பட்ட தகவலை தன்னுடைய Affidavitல் சொல்லாமல் உண்மையை மறைத்து உள்ளார்கள்.

ஒரு மதிப்புமிகு அரசு நிறுவனமான எல்.ஐ.சி நீதிமன்றத்தில் இந்த உண்மையை மறைத்து வழக்கு தொடர்ந்ததற்காக 2 லட்ச ரூபாய் அபராதமாகச் செலுத்த வேண்டும் என்றும் , அந்த அபராத தொகையைச் சென்னை புற்றுநோய் சிகிச்சை ஆராய்ச்சி மையத்திற்கு வழங்க வேண்டும். 

இரண்டு லட்ச ரூபாய் தொகையை வழக்கு தாக்கல் செய்வதற்காக Affidavit தயார் செய்த அதிகாரியிடமிருந்து வசூலித்துக் கொள்ளலாம்" என உத்தரவிட்டதோடு, கார்த்திகேயனுக்குச் சேர வேண்டிய ஓய்வு காலப் பலன்கள் அனைத்தையும் 4 வாரத்திற்குள் வழங்க உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com