மயிலாடுதுறை: வளைகாப்பு நிகழ்ச்சியில் 50 பேருக்கு வாந்தி மயக்கம் - என்ன பிரச்னை?

மயிலாடுதுறை: வளைகாப்பு நிகழ்ச்சியில் 50 பேருக்கு வாந்தி மயக்கம் - என்ன பிரச்னை?
மயிலாடுதுறை: வளைகாப்பு நிகழ்ச்சியில் 50 பேருக்கு வாந்தி மயக்கம் - என்ன பிரச்னை?

மயிலாடுதுறையில் வளைகாப்பு நிகழ்ச்சி ஒன்றில் 50 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு போலீஸ் சரகம் சித்தமல்லி அருகே உள்ள புலவனூர் கிராமத்தை சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மனைவி நித்யா. கர்ப்பிணியான அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், கிராம மக்கள் என பலர் கலந்துகொண்டனர். 

இவர்களுக்கு மதிய உணவு அளிக்கப்பட்டது. இந்த உணவை சாப்பிட்ட சிலர் அடுத்த சில நிமிடங்களில் வாந்தி எடுத்தபடி மயங்கி விழுந்திருக்கின்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனே பந்தியில் இருந்த பலரையும் உணவை சாப்பிட வேண்டாம் என சொல்லிவிட்டு மயங்கி விழுந்தவர்களை காரில் தூக்கிப் போட்டுக்கொண்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். 

இதற்கிடையே மேலும் பலர் கூட்டம் கூட்டமாக வாந்தி எடுத்தபடி மயங்கி சரிய உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் அனைவரையும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனால் நிகழ்ச்சி நடந்த வீட்டிலும், ஒட்டுமொத்த ஊருக்குள்ளும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதில் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் 13 பேர் மட்டும் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக ‘ஏன் இந்த வாந்தி, மயக்கம்?’ என்று மருத்துவர்களிடம் கேட்டபோது ‘உணவு ஒவ்வாமையினால் இப்படி ஏற்பட்டிருக்கிறது. கெட்டுப் போன பொருட்களை கொண்டு சமைப்பது அல்லது முன்பே சமைத்த பொருட்கள் கெட்டுப்போவது அல்லது எண்ணெய் உள்ளிட்ட ஏதோ ஒரு பொருளால்கூட சாப்பாடு விஷமாகி இருக்கலாம். இது ஒவ்வாமையாகி பலரும் வாந்தி எடுத்து மயங்கி இருக்கின்றனர்’ என்றார்.

இதுதொடர்பாக அந்த ஊரைச் சேர்ந்த ஒரு பெரியவரிடம் விசாரித்தபோது, ‘சரியாக ஈயம் பூசாத பித்தளை பாத்திரத்தில் சமைத்தால்கூட இப்படி உணவு விஷமாகிவிடும். அத்தோடு முறையாக சுத்தம் செய்யாத பாத்திரத்தில் சமைத்தாலும் இப்படியான ஒவ்வாமை பிரச்னைகள் வரும்’ என்றார். மேலும் மணல்மேடு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கூறும்போது, ‘எங்களுக்கு ஒரு சிறு தகவல்கூட யாரும் கொடுக்கவில்லை. நாங்களே தெரிந்து கொண்டு மருத்துவமனை சென்று பாதிக்கப்பட்டவர்களை விசாரித்தோம். தற்போது அனைவரும் நலமுடன் உளளனர்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com