தமிழ்நாட்டில் எதிர்ப்பு: நிலக்கரி திட்டத்தில் டெல்டா பகுதிகள் நீக்கம் - மத்திய அரசு அதிரடி

தமிழ்நாட்டில் எதிர்ப்பு: நிலக்கரி திட்டத்தில் டெல்டா பகுதிகள் நீக்கம் - மத்திய அரசு அதிரடி
தமிழ்நாட்டில் எதிர்ப்பு: நிலக்கரி திட்டத்தில் டெல்டா பகுதிகள் நீக்கம் - மத்திய அரசு அதிரடி

நிலக்கரி திட்டத்தில் இருந்து தமிழக பகுதிகளை நீக்கம் செய்து மத்திய அரசு அதிரடி காட்டியுள்ளது

காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரியில் தனியார் மூலம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இது ஒட்டுமொத்த டெல்டா பகுதி விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். 

மேலும் காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கும் முயற்சியை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும், இதுதொடர்பாக மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் தர வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. 

இதையடுத்து நிலக்கரி சுரங்க ஏல அறிவிப்பில் இருந்து காவிரி டெல்டா பகுதிகளை விலக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.  இதற்கிடையே  மத்திய அரசு வெளியிட்ட ஏல அறிவிப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் அனைத்து கட்சி உறுப்பினர்களின் சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதற்கு பதில் அளித்த தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘டெல்டாவில் நிலக்கரி சுரங்க ஏல விவகாரத்தில் முதல்வர் வேகமாக செயல்பட்டு, உடனே பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். நிலக்கரி அமைச்சகத்திடமும் அதிகாரிகளும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என, கூறியுள்ளனர். தமிழக அரசு ஒருபோதும் இத்திட்டத்தை அனுமதிக்காது என்பதை திட்டவட்டமாக கூறுகிறோம்’ என சட்டப்பேரவையில் உறுதி அளித்து இருந்தார். 

இதைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘இந்த செய்தி வந்தபோது உங்களைப் போல் நானும் அதிர்ச்சி அடைந்தேன். செய்தியைப் பார்த்ததுமே அதிகாரிகளுடன் பேசி, உடனடியாக பிரதமருக்கு கடிதம் எழுதினேன். 

அந்த கடிதத்தின் நகலை மத்திய அமைச்சரிடம் அளிக்க வேண்டும் என தி.மு.க நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவிடம் கூறி இருக்கிறேன். நானும் டெல்டாகாரன் தான். உங்களைப் போன்று நானும் உறுதியாக இருப்பேன். எந்த காரணத்தை கொண்டும் தமிழ்நாடு அரசு இந்த திட்டத்துக்கு அனுமதி அளிக்காது’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். 

இந்த நிலையில் நிலக்கரி எடுக்கும் திட்டத்துக்கான ஏலப்பட்டியலில் இருந்து தமிழக பகுதிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அதில் ‘தமிழக மக்களின் நலன் கருதி டெல்டா பகுதிகளை ஏலப்பட்டியலில் இருந்து நீக்குகிறோம்’ என கூறியுள்ளார். மத்திய அரசின் இந்த முடிவுக்கு தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நன்றி கூறி ட்வீட் செய்துள்ளார். 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com