சேலம்: உயிருடன் குப்பையில் வீசப்பட்ட குழந்தை - அதிர்ச்சி பின்னணி

சேலம்: உயிருடன் குப்பையில் வீசப்பட்ட குழந்தை - அதிர்ச்சி பின்னணி
சேலம்: உயிருடன் குப்பையில் வீசப்பட்ட குழந்தை - அதிர்ச்சி  பின்னணி

சேலம் வாழப்பாடியில் உயிருடன் குழந்தை குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம், வாழப்பாடியை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன். இவரது மனைவி செல்வம்மாள். தம்பதியின் மூத்த மகள் 17 வயது சிறுமி. ஜெகதீஸ்வரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். சிறுமி 12ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள உறவினர் ஒருவரை சிறுமி காதலித்துள்ளார். அவருடன் பழக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் கர்ப்பமாகியுள்ளார். 

நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு சிறுமிக்கு பிரசவ வலி எடுத்துள்ளது. இதனை தொடர்ந்து வாழப்பாடி பஸ் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள செல்வாம்பாள் ராஜ்குமார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவருடைய உறவினர்கள் அழைத்துச் சென்றனர்.  

அங்கு சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தை உயிரிழந்துவிட்டதாக சிகிச்சை அளித்த டாக்டர் செல்வம்பாள் தலைமையிலான மருத்துவக் குழுவினர் தெரிவித்ததை அடுத்து சிசு குப்பைத் தொட்டியில் வீசப்பட்டுள்ளது. 

மேலும், சிறுமியின் உடல்நிலை தொடர்ந்து மோசம் அடைந்து வருவதாக தெரிவித்து வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் சிறுமியின் உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சிறுமி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

இதனால் வாழப்பாடி போலீசார் சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனைக்கு விசாரிப்பதற்காக நேற்று சென்றுள்ளனர். இதற்கிடையே உயிரிழந்துவிட்டதாக குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட பெண் குழந்தை மூச்சுத் திணறிக்கொண்டு உயிருடன் இருந்தது தெரிய வந்துள்ளது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த வாழப்பாடி டி.எஸ்.பி ஹரி சங்கர் தலைமையிலான போலீசார் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து, வாழப்பாடி டி.எஸ்.பி ஹரி சங்கர் மற்றும் வாழப்பாடி அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அலுவலர் ஜெயசெல்வி  உள்ளிட்ட குழுவினர் செல்வாம்பாள் ராஜ்குமார் மருத்துவமனை மருத்துவர் செல்வாம்பாளிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து சிறுமிக்கு பிரசவ சிகிச்சை அளிப்பது குறித்து போலீசாருக்கு தெரியப்படுத்தவில்லை. பிரசவத்தின்போது '  கேஸ் சீட்'  மருத்துவ குறிப்பு பட்டியல் முறையாக பின்பற்றவில்லை’ என வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் மருத்துவமனை டாக்டர் செல்வம்பாளிடம் விசாரித்து வருகின்றனர். மேலும் சிறுமியை கர்ப்பமாகிய காதலன்  மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, ‘செல்வாம்பாள் மருத்துவமனை கடந்த 2018ல் தடையை மீறி கர்ப்பமான பெண் ஒருவரின் வயிற்றில் உள்ள பாலினம் குறித்து ஸ்கேன் செய்து பார்த்ததில் அது பெண் கரு என தெரியவந்தது. கருவின் பாலினத்தைக் கண்டறிய ஸ்கேன் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், டாக்டர் செல்வாம்பாள் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்தார். இது இரத்த இழப்புக்கு வழிவகுத்தது. பின்னர் கருப்பை அகற்றப்பட்டது. 

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை மோசம் அடைந்ததால் மறுநாள் மற்றொரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் இறந்தார். இதனால் அப்போது அவர் கைது செய்யப்பட்டார். அதன் பின்பு அரசு மருத்துவ குழுவினர் இந்த தனியார் மருத்துவமனையில் இயங்கி வந்த ஸ்கேன் சென்டரை சீல் வைத்தனர். 

ஜெயிலில் இருந்து வெளியில் வந்த பிறகும் டாக்டர் செல்வாம்பாள் இதே வேலையை தொடர்ந்து செய்கிறார். கேட்பார் யாரும் இல்லை. தவறான வழியில் கர்ப்பமாகும் பெண்கள், கருவை கலைக்க இங்கு தான் வருகின்றனர்’ என்றனர். 

இதுதொடர்பாக வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் கூறும்போது ‘எங்கள் தரப்பிலும், அதிகாரிகள் தரப்பிலும் புகார் கொடுத்து கொண்டுதான் இருக்கிறோம். பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் புகார் கொடுப்பதில்லை. அதனால் இவர்கள் மீது அழுத்தமான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. தற்போது புகார் கொடுத்திருக்கிறோம். நடவடிக்கை இருக்கிறதா? என பார்ப்போம்’ என்றார். மேலும் டி.எஸ்.பி ஹரி சங்கரிடம் பேச முயற்சித்தோம். நமது அழைப்பை ஏற்கவில்லை. 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com