திண்டுக்கல் அருகே ஓடும் பேருந்தில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கணவாய்பட்டி, பங்களா தெருவை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் கோபி. இவரது மனைவி தமயந்தி (45). மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிளை செயலாளராக இருந்து வந்தார். கோபிக்கும், அவரது அண்ணன் ராஜாங்கத்துக்கும் இடையே ஏற்கனவே சொத்து தகராறு இருந்து வந்தது. இது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் தமயந்தி வழக்கு சம்பந்தமாக திண்டுக்கல் பகுதியில் உள்ள தனது வழக்கறிஞரை சந்திக்க தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அதே பேருந்தில் கோபியின் அண்ணனும் சென்று கொண்டிருந்தார். இந்த பேருந்து கோபால்பட்டி- வடுகபட்டி பிரிவு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் உட்கார்ந்து இருந்த ராஜாங்கம் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் தமயந்தியின் தலையில் வெட்டியதில் தலை துண்டானது.
இதை பார்த்ததும் பஸ்சில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். இதையடுத்து அங்கேயே பேருந்து நிறுத்தப்பட்டதால் ராஜாங்கம் கீழே இறங்கி தப்பி ஓடினார். தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் எஸ்.பி பாஸ்கரன் பயணிகளிடம் விசாரணை நடத்தினார். மேலும் தமயந்தியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தப்பி சென்ற ராஜாங்கத்தை பிடிக்க காவல் ஆய்வாளர் தங்க முனியசாமி, சார்பு ஆய்வாளர் ஜெய்கணேஷ் ஆகியோர் தலைமையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து ராஜாங்கம் வெளியூருக்கு தப்பிச் செல்ல முயன்றது தெரிந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் சுற்றிவளைத்து ராஜாங்கத்தை கைது செய்தனர்.