பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ராமநாதபுரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் பொதுப்பணித்துறை அதிகாரியிடம் இருந்து கணக்கில் வராத பல லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து அதிகாரியின் காரைக்குடி வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்தனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பர்மா காலனி தந்தை பெரியார் நகர் பகுதியில் வசித்து வருபவர் கண்ணன். இவர் ராமநாதபுரத்தில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில், இவர் அதிக லஞ்சம் பெறுவதாகத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்குப் புகார்கள் வந்தது.இதன் அடிப்படையில் நேற்று இவர் ராமநாதபுரம் அரசு விருந்தினர் மாளிகை அறையில் தங்கியிருந்தபோது, டிஎஸ்பி ஜான் பிரிட்டோ தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
சோதனையில், அறை மற்றும் அவரது வாகனத்தில் இருந்து கணக்கில் வராத பணம் 32 லட்சத்து 68 ஆயிரம் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டது.இதன் தொடர்ச்சியாக, செயற்பொறியாளர் கண்ணன் வசித்து வரும் காரைக்குடி பர்மா காலனி தந்தை பெரியார் நகர் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த அதிரடி சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.