தஞ்சை மாவட்டத்தில் 836 குழந்தைகள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதவில்லை என தெரியவந்துள்ளது
தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் தஞ்சையில் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் போது வழக்கத்திற்கு மாறாக மேஜை முன்பு பிரதமர் மோடி புகைப்படத்தை வைத்தார். அப்போது பத்திரிகையாளர்கள் குறுக்கிட்டு முதலமைச்சர் படத்தையும் சேர்த்து வைக்குமாறு வலியுறுத்தியதால் செய்தியாளர்கள் சந்திப்பில் சலசலப்பு ஏற்பட்டது.
புதுடெல்லி தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையர் ஆனந்த் தஞ்சையில் உள்ள சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், வேலுார் கூர்நோக்கு இல்லத்திலும், காஞ்சிபுரம் பெண்கள் கூர்நோக்கு இல்லத்திலும் தலா 6 பேர் தப்பியோடி உள்ளனர். இதில் நான்கு பேர் மீட்கப்பட்டு விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதையும் கண்காணித்து வருகிறோம். இது குறித்து ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை துவங்கியுள்ளது.
காஞ்சிபுரம் கலெக்டருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வேலுார் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து சிறுவர்கள் தப்பித்து சென்றதாக தொடர்பாக போலீசில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் இது போன்ற செயல்களால், தமிழகத்தில் சட்டம்-ஓழுங்கு சரி இல்லையோ என எண்ணம் தோன்றுவதாக கூறினார்.
மேலும், கூர்நோக்கு இல்லங்களில் இருந்து சிறுவர்கள் தப்பித்து செல்லுவதை தடுக்க தமிழக அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். கூர்நோக்கு இல்லம், குழந்தைகள் இல்லம் போன்றவற்றில் பாலியல் துன்புறுத்தல், மதமாற்றம் தொடர்பாக ஆணையம் தீவிரமாக கண்காணித்து வருகிறது என்றார்.தஞ்சை மாவட்டத்தில் 836 குழந்தைகள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதவில்லை என தெரியவந்துள்ளது. இதில் மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
நீட் தேர்வு குறித்து தேவையற்ற வதந்திகள் பரப்ப வேண்டாம் என வலியுறுத்தினார். செய்தியாளர்கள் சந்திப்பின்போது இடையில் ‘மோடி புகைப்படத்தை மேஜையில் வைத்த விட்டு நாட்டின் பிரதமர் என்ற முறையில் வைப்பதாக விளக்கம்’ அளித்தார். அப்போது குறுக்கிட்ட செய்தியாளர்கள் ‘மாநிலத்தின் முதலமைச்சர் என்ற முறையில் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தையும் வைக்கலாமே’ என கேள்வி எழுப்பியதால் செய்தியாளர் சந்திப்பில் சலசலப்பு ஏற்பட்டது.