காரைக்குடி - ராசிபுரம் பகுதிகளில் 70 கோடி ரூபாய் மதிப்பில் மினிடைடல் பார்க் அமைக்க நடவடிக்கை
தமிழக சட்டப்பேரவையில் கடந்த 20ம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 21ம் தேதி வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், தொழில்துறை தொடர்பான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில், தமிழகத்தின் மையப் பகுதி என்றால் அது திருச்சிதான். அப்படிப்பட்ட திருச்சியில் ரூ.600 கோடி மதிப்பில் 10 லட்சம் சதுரஅடி பரப்பளவில் டைடல் பார்க் தொடங்கப்படும். இதன் மூலம் தகவல் தொழில்நுட்பதுறை மேம்படுத்தப்படும். இந்த நடவடிக்கை மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
அதேபோன்று, சேலம் மாவட்டத்தில், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையிலும், தகவல் தொழில்நுட்பதுறையை மேம்படுத்தும் வகையிலும், டைடல் பார்க் அமைக்கப்படும். குறிப்பாக, தொழிற்சாலைகள் குறைவாக உள்ள தர்மபுரி மாவட்டத்தில் மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலை கொண்டுவருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்குடி மற்றும் ராசிபுரம் பகுதிகளில் 70 கோடி ரூபாய் மதிப்பில் மினிடைடல் பார்க் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசுகையில், திருவள்ளூர் மாவட்டம் காரணியல் 250 ஏக்கர் பரப்பளவில் 100 கோடி ரூபாய் மதிப்பில் பாதுகாப்புத்துறை சார்ந்த மின்னனுவியல் மற்றும் பாதுகாப்புத்துறை தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் ஆளல்லா விமானம் மற்றும் விமான உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யப்படும் என்றார்.