'கரித்தூள் மீண்டும் பரவினால் கடும் நடவடிக்கை பாயும்' என ஆட்சியர் எச்சரித்து சென்றுள்ளார்
கரூர் மாவட்டம் புகழூரில் தனியாருக்குச் சொந்தமான சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது.60 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலையிலிருந்து வெளியேறும் கரித்துகள்களால் அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள செம்படாபாளையம், புகழூர்,ஹைஸ்கூல் மேடு, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் கரித்துககள்கள் படிந்து ஊரே கருமை நிறமாகக் காட்சியளிக்கிறது.
இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கரூர் ஆட்சியரைச் சந்தித்துப் புகார் அளித்துள்ளனர்.புகாரின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற ஆட்சியர் பிரபு சங்கர், புகழூரிலுள்ள தனியார் சர்க்கரை ஆலையைச் சோதனை செய்தார்.
அப்போது எரிபொருளாக நிலக்கரிக்குப் பதில் கரும்பு தோகையைக் கொண்டு எரிப்பதால் அதிலிருந்து வெளியேறும் புகையில் கரித்துகள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த ஆட்சியர் 100% சதவிகிதம் எரிபொருளாக நிலக்கரியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.எப்படி நீங்கள் கரும்பு தோகையைப் பயன்படுத்தி எரிக்கிறீர்கள் என்று சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு ஆலையின் பொது மேலாளர் செந்தில்வேல், “இந்த ஆண்டு மட்டும் எங்களுக்கு விலக்குக் கொடுங்கள். கரும்பு அறவை நடந்து கொண்டிருக்கிறது. கரும்பு அரவை நின்றால் விவசாயிகள் பாதிப்படைவார்கள்.அடுத்த ஆண்டிலிருந்து 100% நிலக்கரி மூலம் எரியூட்டும் கொதிகலன்களை நிறுவி சர்க்கரை ஆலையை இயக்குகிறோம்" என்றார்.
இதைக் கண்காணிக்க மாசு கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவரை நியமித்த ஆட்சியர் விரைவில் மக்கள் பாதிக்காத வகையில், ஆலையை இயக்க வேண்டும். மீண்டும் பொதுமக்களிடமிருந்து இது போன்ற புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துவிட்டு சென்றார்.