ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மார்ச் 15ம் தேதி நெஞ்சு வலி ஏற்பட்டது
சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில், தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் மார்ச் மாதம் 10-ந் தேதி சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக்கொண்டார்.
சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்ற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரான மல்லிகார்ஜூன கார்கே, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரை டெல்லியில் சந்தித்து வாழ்த்து பெற்றார். டெல்லியில் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றுவிட்டு, விமானம் மூலம் சென்னை திரும்பிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மார்ச் 15ம் தேதி நெஞ்சு வலி ஏற்பட்டது.
இந்த நிலையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து தொடர் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதால் கடுமையான உடல் சோர்வுடன் காணப்பட்டு வந்த அவர், நெஞ்சுவலி ஏற்பட்டததால், சென்னை போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் இளங்கோவனுக்கு திடீரென கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால், மருத்துவமனையில் தனிவார்டில் வைத்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே, கொரோனா தொற்றில் இருந்து அவர் மீண்டுவிட்ட நிலையில், லேசான மூச்சு திணறல் இருந்துவந்தது.
இதனைத்தொடர்ந்து, இளங்கோவனுக்கு மருத்துவர்கள் தொடர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதனால், அவரது உடல் நிலை சீரானது. இதனையடுத்து, அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். மேலும், கொரோனா தொற்றில் இருந்து இளங்கோவன் மீண்டார்.
இந்த நிலையில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு சிகிச்சை நிறைவடைந்துள்ளதால், அவர் மருத்துமவனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் வீடு திரும்பினார். இது தொடர்பாக, தனியார் மருத்துவமனை நிர்வாகம் விரிவாக அறிக்கை வெளியிட்டுள்ளது.