ஹரி பத்மனுக்கு எதிராக மாணவர்களை பேராசிரியர்கள் தூண்டி விடுகின்றனர்.
கலாஷேத்ரா பாலியல் தொல்லை விவகாரத்தில் அரசியல் நடக்கிறது என நடிகை அபிராமி பரபரப்புப் பேட்டியளித்துள்ளார்.
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா நடனக் கல்லூரியில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளிப்பதாக உதவி நடனப் பேராசிரியர் ஹரி பத்மன் உள்பட 4 பேர் மீது பரபரப்புப் புகார் அளிக்கப்பட்டது. இதில் நீதி வழங்க வேண்டும், பாலியல் தொல்லை அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து, உதவி நடனப்பேராசிரியர் உள்பட 4 பேரை சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. மேலும் தலைமறைவாக இருந்த நடன உதவிப் பேராசிரியர் ஹரி பத்மன் மீதான புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுச் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் 3 பேர் மீது இதுவரை முறையாகப் புகார்கள் வரவில்லை என்றும் அப்படி வந்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை பெருநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கலாஷேத்ரா முன்னாள் மாணவியும், நடிகையுமான அபிராமி, ”கலாஷேத்ரா விவகாரம் குறித்து முன்னாள் மாணவி என்ற அடிப்படையில் பேச வந்துள்ளேன். அதற்காகக் குரல் கொடுத்துள்ளேன். மேலும் சிலர் விளம்பரத்திற்காகக் குரல் கொடுப்பதாகச் சொல்கிறார்கள். அப்படி எதுவும் இல்லை. வேண்டும் என்றால் குரல் கொடுக்காமல் அமைதியாக இருந்து இருக்கலாம். ஆனால் கலாஷேத்ரா முன்னாள் மாணவி என்ற முறையில் இதற்காகக் குரல் கொடுக்க வந்துள்ளேன்.
கலாஷேத்ரா பற்றிச் சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களால் வேதனை அடைந்தேன். கலாஷேத்ரா ஆசிரியர் ஒருவர் என் நண்பர் மூலம் தொடர்பு கொண்டு ஹரி பத்மனுக்கு எதிராகப் பேசுமாறு கூறினார். ஹரி பத்மன் மிகவும் சிறந்த ஆசிரியர். பேராசிரியர் ஹரி பத்மன் எங்களுக்கு வகுப்பெடுத்த வரை எந்தவித தொல்லையும் அளிக்கவில்லை.
இந்த விவகாரத்தில் கலாஷேத்ரா மாணவிகள் பலி ஆடுகளாக ஆக்கப்படுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை தந்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. நான் 2010 முதல் 2015 வரை அங்குப் படித்துள்ளேன். 2013-14 காலக்கட்டத்தில் கல்லூரி இயக்குநராக இருந்த லீலா சாம்சன் மீது போலியாகக் குற்றம்சாட்டி பிரச்னையை எழுப்பினர்.
இதே நிர்மலா என்ற பேராசிரியர் தான் அன்று மாணவிகளை வற்புறுத்தி கடிதம் எழுதி அதில் கையெழுத்திட வைத்தார். இதில் என்னையும் கையெழுத்திட வற்புறுத்தினர். அன்று அவங்களுக்கு நடந்ததே இன்று ஹரி பத்மனுக்கும் நடந்துள்ளது. பாலியல் தொல்லை விவகாரத்தில் திரித்துக்கூறுகிறார்கள். கலாஷேத்ராவுக்கு எதிராகப் பேச வைக்க முயற்சி நடந்தது. இந்த விவகாரத்தில் அரசியல் நடக்கிறது. ஹரி பத்மனை மையமாக வைத்து நாடகம் நடக்கிறது. ஹரி பத்மனுக்கு எதிராக மாணவர்களை ஆசிரியைகள் நிர்மலா, நந்தினி ஆகியோர் தூண்டி விடுகின்றனர்.
இந்த விவகாரத்தில் நான் எதிராகப் பேசியதால் என்னைச் சங்கி என்று அழைக்கின்றனர். மேலும் இந்தக் கலாஷேத்ரா விவகாரத்தில் என்னிடம் பேசியதை போன்று பலரிடம் வற்புறுத்தி பேச வைக்கப்பட்டிருக்கலாம். ஆகையால் பேராசிரியர் நிர்மலா நாகராஜ் உள்ளிட்டவர்களின் செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்ய வேண்டும். அதில் உள்ள தொலைப்பேசி அழைப்புகள் மூலம் அவர்கள் யாரிடம் பேசி உள்ளனர் எனத் தெரிந்துவிடும். தவறு செய்யவில்லை என்றால் ஏன் அவர்கள் பயப்பட வேண்டும்? என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும் என்னிடம் பேராசிரியை பேசிய ஆடியோ இல்லை. அவர்களைப் போன்று எழுதி வைத்துக்கொண்டு நடந்து கொள்ள எனக்குத் தெரியாது. இதுகுறித்து காவல்துறையின் ஆலோசனையைப் பெறவே கமிஷ்னர் அலுவலகத்திற்கு வந்தேன். சிலரின் காரியத்தைச் சாதித்துக்கொள்ள அங்கு ஹரி பத்மன் தடையாக உள்ளதால், அவர் மீது இதுபோன்ற புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாக நினைக்கிறேன்’ என நடிகை அபிராமி தெரிவித்தார்.