குளத்தில் 5 பேர் இறந்தது தொடர்பாக அமைச்சர் பி.கே.சேகர் பாபு தமிழக சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்
சென்னை மடிப்பாக்கம் அருகே மூவரசம்பட்டு பகுதியில் உள்ள கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சியின்போது 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ், வி.சி.க, சி.பி.எம், சி.பி.ஐ உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இதுதொடர்பாக பதில் அளித்தார்.
அதில், ‘இதயம் இருப்பவர்கள் அனைவரும் இரக்கப்படும் துயரச் சம்பவம் இது. இது கோயிலின் குளம் இல்லை. பஞ்சாயத்து குளம். கடந்த 4 ஆண்டுகளாகத்தான் இந்த குளத்தில் கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த கோயில் ஒரு டிரஸ்ட்டின் கீழ் உள்ளது. கடந்த ஆண்டு எந்தவிதமான அனுமதியும் இல்லாமல் கும்பாபிஷேகம் செய்ய முயற்சி செய்தார்கள். இதையடுத்து உடனடியாக இக்கோயிலுக்கு தர்க்கார் நியமனம் செய்யப்பட்டார்.
அதை எதிர்த்து டிரஸ்ட் சார்பில் மேல்முறையீடு செய்தார்கள். இது விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது. அதற்குள்ளாக இந்த சம்பவத்தில் விலை மதிப்பு இல்லாத மனித உயிர்கள் பறிபோய்விட்டன. இந்த நிகழ்ச்சி குறித்து அவர்கள் காவல்துறையிடம்கூட தெரிவிக்கவில்லை.
இனிமேல் இது போன்ற துயரச் சம்பவங்கள் நடக்காமல் இருக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், டிரஸ்ட் போன்ற அமைப்புகள் இது போன்ற நிகழ்வுகளை நடத்தும்போது காவல்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும்’ என அமைச்சர் பி.கே.சேகர்பாபு விளக்கம் அளித்தார்.
முன்னதாக குளத்தில் மூழ்கி 5 பேர் இறந்த துயரச் சம்பவத்துக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி சட்டமன்ற உறுப்பினர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.