விதிகளை மீறி லாரிகளில் ஏற்றிச் செல்லும் சவுடு மண்ணால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் முதல் நாகப்பட்டினம் மாவட்டம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் சவுடு மண் குவாரிகள் அமைத்து ஆயிரக்கணக்கான லாரிகள் இரவு. பகல் பாராது 24 மணி நேரமும் மணலை அள்ளி கொண்டு சீர்காழி நகர்ப் பகுதியைக் கடந்து புறவழிச் சாலைக்குச் சென்று வருகிறது.
இந்த லாரிகளில் விதிகளை மீறி அனுமதிக்கப்பட்ட அளவைவிடக் கூடுதல் அளவு மணலை ஏற்றிக்கொண்டு வளைவுகளிலும் வேகத்தடைகளிலும் செல்லும்போது மணல் சரிந்து சாலை முழுவதும் சிதறுகிறது. இதனால் நகர்ப் பகுதி உள்ள சாலை முழுவதும் மணல் நிறைந்து வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் லாரிகளில் ஏற்றப்படும் அதிக மணலால் லாரியின் கதவுகள் திடீரென திறந்து கொள்வதால் மணல் முழுவதும் சாலையில் கொட்டிக் கொண்டே செல்கிறது. இருசக்கர வாகனத்தில் செல்வோர் இந்த மணலில் சிக்கி தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. நான்கு வழிச்சாலைக்கு மணலை ஏற்றிச் செல்லும்போது உரியப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஆட்சியர் மகாபாரதியிடம் கேட்டபோது ‘இந்த புகார் குறித்து உடனடியாக வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள், தாசில்தார் உள்ளிட்டோருக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்’ என்றார்.
- ஆர்.விவேக் ஆனந்தன்