திருச்சி சிறப்பு முகாமிலிருந்து 7 இலங்கைத் தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
திருச்சி மத்தியச் சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு முகாமிலிருந்து 7 இலங்கைத் தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
தமிழகத்திற்கு வெளிநாடுகளிலிருந்து போலி பாஸ்போர்ட்டில் வந்தவர்கள் மற்றும் விசா காலம் முடிந்த பின்பும் தமிழகத்தில் நிரந்தரமாகத் தங்கியவர்கள் என அனைவரையும் விசாரணை நடத்தி திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைத்து தமிழக அரசு பராமரித்து வருகிறது.
இவர்களுக்கு உணவு மற்றும் செலவுகளை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கி வருவதுடன் இவர்களை தங்களுடைய கட்டுப்பாட்டு வளையத்துக்குள் வைத்துள்ளது. அதில் இலங்கை, கம்போடியா, சிங்கப்பூர், பல்கேரியா, ரஷ்யா, இந்தோனேசியா, பங்களாதேஷ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 117 பேர் தற்போது திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட்பயாஸ் ஆகியோரும் இந்த சிறப்பு முகாமில் தான் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மீது இன்று வரை வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவர்கள் தங்களுடைய தாய் நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்படாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சிறப்பு முகாம் வாசிகளில் 7 பேருக்கு விடுதலை ஆவதற்கான உத்தரவு ஆவணங்கள் வந்து சேர்ந்ததால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து கே.கே நகர் காவல் உதவி ஆணையர் சுரேஷ்குமார் தலைமையிலான காவலர்கள் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 7 பேரை அவர்களுடைய உறவினர்களுடன், சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன், பொள்ளாச்சியைச் சேர்ந்த பார்த்திபன், விருதுநகரைச் சேர்ந்த விஜயகுமார், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த கனகசபை, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவிஹரன், சசிஹரன், ஏசுதாஸ் ஆகிய 7 பேரும் தங்களுடைய சொந்த மாவட்டங்களுக்கு இன்று புறப்பட்டுச் சென்றனர். நீண்ட நாட்களாக கடும் போராட்டத்திற்குப் பிறகு இந்த விடுதலை அவர்களுக்குக் கிடைத்துள்ளது. இவர்களைப் போல் இன்னும் பலர் முகாமில் விடுதலை வேண்டி மனு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களில் கெட்டியான் பாண்டியன் என்பவர் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர் என்பதால் விடுதலை செய்த பின்னரும் அவரை தொடர்ந்து போலீஸார் கண்காணித்து வருவதாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.
- ஷானு