ஏப்ரல் 19ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகப் போலி வீடியோ பரப்பிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பீகார் யூட்யூபர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது.
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகப் போலி வீடியோக்கள் பரவியது. இச்சம்பவம் பீகார் மட்டுமின்றித் தமிழகம் உள்படப் பல்வேறு மாநிலங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக பீகார் அரசு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு அமைப்பு விசாரிக்க உத்தரவிட்டது. குழுவும் தமிழகத்தில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதியில் வடமாநில தொழிலாளர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை திருப்தி அளிப்பதாகவும், வடமாநில தொழிலாளர்கள் யாரும் தாக்கப்படவில்லை என்றும் கூறியது.
இருப்பினும் சிலர் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகப் போலி வீடியோக்களைப் பரப்பி வந்தனர். இதையடுத்து, பீகார் மாநில போலீஸார் மற்றும் தமிழகப் போலீஸார் போலி வீடியோக்கள் பரப்பியவர்களைக் கைது செய்தனர். இந்த நிலையில், போலி வீடியோ பரப்பிய வழக்கில் பீகார் யூட்யூபர் மணீஷ் காஷ்யப் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பீகார் யூட்யூபர் மணீஷ் காஷ்யப்-ஐ சமீபத்தில் பீகார் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்டு இருந்தவரை விசாரணைக்காக மதுரைக்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டார். இந்த வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில், யூட்யூபர் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மதுரை எஸ்.பி சிவபிரசாத் அறிவித்துள்ளார். போலி வீடியோ விவகாரத்தில் தொடர்பாக, தமிழ்நாட்டில் மட்டும் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மணீஷ் காஷ்யப்பை ஏப்ரல் 19ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.