தெலங்கானா: பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் கைது - என்ன காரணம்?

தெலங்கானா: பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் கைது - என்ன காரணம்?
தெலங்கானா: பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் கைது - என்ன காரணம்?

10 ஆம் பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிந்த விவகாரம் தொடர்பான வழக்கில் தெலங்கானா மாநில பாஜக தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்

தெலங்கானா மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் தெலுகு மொழித்தேர்வு வினாத்தாள் கசிந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் தேர்வறை கண்காணிப்பாளர் ஒருவர் மூலமாக வினாத்தாள் செல்போனில் படம் பிடிக்கப்பட்டு சில ஆசிரியர்களுக்கு பகிரப்பட்டது தெரிய வந்தது. 

இதன் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட தேர்வறை கண்காணிப்பாளர் உள்பட 4 அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தை முன்வைத்து ஆளும் பாரத் ராஷ்ட்ர சமிதியை (BRS) கண்டித்து பா.ஜ.க பெரிய அளவிலான போராட்டங்களை நடத்தி வந்தது. மேலும் ஒரு வினாத்தாளை கூட பாதுகாக்க முடியாத தெலங்கானா கல்வித்துறை அமைச்சர் உடனே பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி பா.ஜ.க-வினர் போராட்டம், பேரணி என ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற 10 ஆம் வகுப்பு இந்தி தேர்வு வினாத்தாளும் வாட்ஸ் அப்பில் கசிந்தது. இந்தி தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கிய நிலையில் 10 மணியளவில் இந்த வினாத்தாளின் புகைப்படம் வாட்ஸ் அப்பில் பரவியது. இந்தி வினாத்தாள் கசிந்ததால் அதையும் கண்டித்து பா.ஜ.க போராட்டங்களில் குதித்தது. 

இதுதொடர்பாக சைபர் க்ரைம் போலீசார் தனிப்படைகளை அமைத்து நடத்திய விசாரணையில் பா.ஜ.க-வை சேர்ந்த பிரசாந்த் என்பவரே இந்தி வினாத்தாளை கசியவிட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் போலீசார் அவரை கைது செய்தனர்.

பா.ஜ.க-வை சேர்ந்த பிரசாந்த் மாநில தலைவர் பண்டி சஞ்சய்குமாருக்கு வினாத்தாளை அனுப்பியதும், இதுதொடர்பாக அவர்கள் செல்போனில் பேசிக்கொண்டதும் கண்டுபிடிக்கப்பட்டதால் அவரையும் போலீசார் நேற்று நள்ளிரவில் அதிரடியாக கைது செய்தனர். முதலில் தன்னை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் சஞ்சய் குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

ஆனாலும் அவரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று ஜீப்பில் ஏற்றி காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பல்வேறு நலத் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்கு பிரதமர் மோடி 8ம் தேதி வர இருக்கும் சூழலில் தெலங்கானா மாநில பா.ஜ.க தலைவர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com