தஞ்சாவூர்: போக்குவரத்து நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி - சிக்கிய தாய், மகன்

தஞ்சாவூர்: போக்குவரத்து நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி - சிக்கிய தாய், மகன்
தஞ்சாவூர்: போக்குவரத்து நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி - சிக்கிய தாய், மகன்

தஞ்சாவூரில் போக்குவரத்து நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்த தாய், மகனை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் ‘ராஹத் டிரான்ஸ்போர்ட்’ என்ற பெயரில் போக்குவரத்து நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்தது தொடர்பான வழக்கில் தலைமறைவாக இருந்த தாய், மகனை  பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.  

தஞ்சாவூர், அய்யம்பேட்டையை சேர்ந்தவர் கமாலுதீன். இவர், ‘ராஹத் டிரான்ஸ்போர்ட்’ என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக கூறியதாகவும், இதை நம்பி பலரும் கோடிக்கணக்கான ரூபாயை ‘ராஹத் டிரான்ஸ்போர்ட்’ என்ற நிறுவனத்தில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு செப்.19ம் தேதி கமாலுதீன் இறந்துவிட்டார். இதனைத் தொடர்ந்து அவரது மனைவி ரஹானா பேகம், கமாலுதீனின் சகோதரர் அப்துல் கனி ஆகியோரிடம் முதலீட்டாளர்கள் தங்களுடைய பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள், தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். இதைத்தொடர்ந்து கமாலுதீன் சகோதரர் அப்துல் கனி, கமாலுதீன் மனைவி ரஹானா பேகம், மேலாளர் நாராயணசாமி ஆகியோர் மீது போலீசார் மோசடி வழக்குப் பதிவு செய்தனர். இதன் பின்னர் இந்த மனுக்கள்  திருச்சி மாவட்ட பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இதுதொடர்பாக திருச்சி மாவட்ட பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு டி.எஸ்.பி லில்லி கிரேஸ் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, இவர்கள் போக்குவரத்து நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்தது தெரிய வந்ததாக தெரிகிறது. 

இதையடுத்து கமாலுதீனுக்கு உடந்தையாக இருந்த 5 பேரை கைது செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக தலைமறைவாக இருந்து வந்த கமாலுதீன் மனைவி ரஹானா பேகம் (48), மகன் அப்சல் ரகுமான் (25) ஆகிய இருவரையும் திருச்சி மாவட்ட பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு டி.எஸ்.பி லில்லி கிரேஸ் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட இருவரும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com