மீனவர் நலத்துறை: 33 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அனிதா ராதாகிருஷ்ணன்

மீனவர் நலத்துறை: 33 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அனிதா ராதாகிருஷ்ணன்
மீனவர் நலத்துறை: 33 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அனிதா ராதாகிருஷ்ணன்

மீனவர்களுக்கு வழங்கப்படும், இயற்கை மரணத்திற்கான நிவாரணத் தொகை ரூ.15,000 லிருந்து ரூ.25,000 உயர்த்தி வழங்கப்படும்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீனவர் நலத்துறையின் சார்பில் 33 புதிய அறிவிப்புகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். அதில், '500 மீனவ இளைஞர்களுக்கு மீன்பிடி படகு வழங்கப்படும் என்றும், மீனவர்கள் இயற்கை மரண நிவாரணத்தொகை ரூ.15,000 லிருந்து ரூ.25,000 உயர்த்தி வழங்கப்படும்' என்றும் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 -2024-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 20ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, 21ம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்ற நிலையில், மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இன்று சட்டப் பேரவையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் புதிய அறிவிப்புகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.

புதிய அறிவிப்பில், தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தின் மூலம் மீனவர்களுக்கு வழங்கப்படும், இயற்கை மரணத்திற்கான நிவாரணத் தொகை ரூ.15,000 லிருந்து ரூ.25,000 உயர்த்தி வழங்கப்படும் என்றும், கடலில் மீன்பிடிக்கும்போது காணாமல் போகும் மீனவர்களின் குடும்பத்திற்கு நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.250 லிருந்து ரூ.350ஆக உயர்த்தி வழங்கப்படும்' எனத் தெரிவித்தார்.

'தமிழகத்தில், 10,000 இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளுக்கு 75 சதவீதம் மானியத்தில், ரூ.4 கோடியே 50 லட்சம் செலவில் 40,000 உயிர்காப்புச் சட்டைகள் வழங்கப்படும்' என்றும், 'நாகப்பட்டினம் மாவட்டம், சாமந்தான்பேட்டையில் ரூ.40 கோடி செலவில் சிறிய மீன்பிடித்துறைமுகம் அமைக்கப்படும்' என்றும், 'மீன்பிடி கலன்களுக்கு வழங்கப்படும் மீன்பிடி உரிமத்தினை 3 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் நடைமுறை இனி வரும் காலத்தில் கொண்டுவரப்படும்' என்றும் புதிய அறிவிப்பை வெளியிட்டார்.

இதேபோன்று, 'திருநெல்வேலி மாவட்டம், கூத்தன்குழி மற்றும் இடிந்தகரை, விழுப்புரம் மாவட்டம் முட்டுக்காடு அழகன்குப்பம், இராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி மற்றும் நம்புதாளை, கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் வடக்கு, தெற்கு மற்றும் சூர்யா நகர் ஆகிய 9 மீனவ கிராமங்களில் ரூ.40 கோடியில் புதிய மீன் இறங்குதளம் அமைக்கப்படும்' என்றார்.

மேலும், நாகூர் பட்டினச்சேரி மற்றும் கீச்சான்குப்பம், செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலிகுப்பம், இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மேற்குவாடி மற்றும் ரோச்மாநகர், திருநெல்வேலி மாவட்டம், பெருமணல், கன்னியாகுமரி மாவட்டம், மேலகடியப்பட்டணம், தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு, திருவள்ளூர் மாவட்டம், நொச்சிக்குப்பம், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய திட்டங்களை அறிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com