'சுந்தரி யானை மற்ற யானைகளை விட்டுத் தள்ளித்தான் இருக்க வேண்டும்' என அதிகாரிகள் விளக்கம்
திருச்சி அருகே உள்ள சிறுகனூர் பகுதியில் எம்.ஆர்.பாளையம் என்ற இடத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் யானைகள் மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. அனுமதியின்றித் தனியாரால் வளர்க்கப்படும் யானைகள் மற்றும் நோயால் பாதிக்கப்பட்ட யானைகளை மீட்டு இந்த மறுவாழ்வு மையத்தில் வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.தற்போது 9 யானைகள் இங்குப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சமீபத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை பகுதிகளில் அனுமதியின்றிச் சரியான பராமரிப்பு இல்லாமல் வளர்க்கப்பட்ட யானைகளை வைத்துப் பிச்சை எடுப்பது,விழாக்களுக்கு அழைத்துச் சென்று துன்புறுத்துகிறார்கள் என வனத்துறையினருக்குத் தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன.புகாரின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் அங்கு வளர்க்கப்பட்டு வந்து 67 வயதான சுந்தரி என்ற யானையை மீட்டு,மறுவாழ்வு மையத்திற்குக் கொண்டு வந்தனர்.
திருச்சி தலைமை வனப் பாதுகாவலர் சதீஷ், மாவட்ட வன அலுவலர் கிரண், உதவி வனப் பாதுகாவலர் சம்பத்குமார் ஆகியோர் யானையைப் பார்வையிட்டுக் கால்நடை மருத்துவர் உதவியுடன் பரிசோதித்தனர். அப்போது யானையின் வயது,உடல் வெப்பநிலை, எடை அளவு குறித்து அளவீடுகள் குறிக்கப்பட்டது.பின்னர் யானைக்குக் கொடுக்க வேண்டிய உணவு மற்றும் அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை குறித்த வழிகாட்டுதல்கள் செய்யப்பட்டன.சுந்தரி யானைக்குக் காசநோய் உள்ளிட்ட வேறு ஏதேனும் நோய்த் தொற்றுகள் உள்ளதா என்பதை அறிய யானையின் சளி,சாணம், சிறுநீர் உள்ளிட்ட மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர், அப்படி எந்த நோய் தாக்குதலும் இல்லை என்று தெரிய வந்தால் தான் மற்ற யானைகளுடன் சேர்த்து சுந்தரி யானையையும் பராமரிப்பார்கள் என்றும் அதுவரை சுந்தரி யானை மற்ற யானைகளை விட்டுத் தள்ளித்தான் இருக்கும் என அதிகாரிகளின் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.