நிச்சயமாக நம்முடைய தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது
டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை எந்தக் காலத்திலும் அனுமதிக்க மாட்டோம் எனச் சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
தமிழ்நாடு சட்டசபையில் கடந்த கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டும், 21ம் தேதி வேளாண்மை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, 23, 24, 27, 28 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதமும், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோரின் பதில் உரையும் இடம் பெற்றன.
இதையடுத்து, கடந்த மாதம் 29ம் தேதி முதல் துறை வாரியாக மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. இந்த நிலையில், 3 நாட்கள் தொடர் விடுமுறைக்குப் பிறகு இன்று சட்டப்பேரவை கூடியது. இன்றைய கூட்டத்தில் அமைச்சர்கள் நாசர், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மானியக்கோரியின் மீதான கேள்விகளுக்குப் பதில் அளித்தனர்.
இந்நிலையில் நிலையில் டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்கும் மத்திய அரசின் திட்டம் குறித்துச் சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தை தி.மு.க மற்றும் அ.தி.மு.க, பா.ம.க, வி.சி.க, சி.பி.ஐ, சி.பி.எம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்தனர்.
இந்த தீர்மானம் குறித்துப் பேசிய டி.ஆர்.பி.ராஜா, டெல்டா மக்களின் வாழ்வாதாரத்தை ஏலம் விடும் செயல் என்றார். மேலும் முதலமைச்சர் டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பார் என்று நம்புவதாகத் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து அ.தி.மு.க உள்படப் பல்வேறு கட்சிகளின் எம்.எல்.ஏ-க்கள் பேசினர்.
இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டப்பேரவை உறுப்பினர்களின் கருத்துக்கள், உணர்வுகளோடு முதலமைச்சர் ஒன்றி இருக்கிறார். மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்புக்கு முன்பாகத் தமிழக அரசிடம் எந்த விதமான ஒப்புதலும், கலந்தாலோசனையும் பெறவில்லை.
அவர்களாகவே தன்னிச்சையாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது கெடுவாய்ப்பாக அமைந்துள்ளது எனப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தமிழ்நாடு அரசு ஒருபோதும் இந்தத் திட்டத்தை அனுமதிக்காது என தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டு பேசினார்.
தமிழக அதிகாரிகளும், மத்திய நிலக்கரி அமைச்சக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இந்தக் காலத்திலும், எந்தச் சூழ்நிலையிலும், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியங்களாக விளங்கும் அன்னை பூமியாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகள் ஒரு போதும் இத்தகைய திட்டங்களைத் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது எனத் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இங்கே கொண்டு வந்திருக்கக்கூடிய கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு நம்முடைய தொழில் துறை அமைச்சர் விளக்கமாக பதிலளித்திருக்கிறார். எனவே, நான் நீண்ட நேரம் அதுகுறித்து விளக்க வேண்டிய அவசியமில்லை. நீங்களெல்லாம் இந்தச் செய்தியைக் கேட்டு எப்படி அதிர்ச்சிக்கு ஆளானீர்களோ, நானும் அதே உணர்வோடுதான் அதிர்ச்சிக்கு ஆளானேன்.
இதுகுறித்த செய்தியைப் பார்த்தவுடன் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நான் தொடர்பு கொண்டு பேசி, அதற்குப் பிறகு உடனடியாக பிரதமருக்கு கடிதம் எழுதினேன். அதோடு, நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கிற காரணத்தால், அங்கே டெல்லியில் இருக்கக்கூடிய தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலுக்கு அந்தக் கடிதத்தினுடைய நகலை அனுப்பி, உடனடியாக சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரைச் சந்தித்து, நம்முடைய எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், நான் பிரதமருக்கு எழுதிய கடிதத்தை நீங்கள் அவரிடத்திலே தர வேண்டுமென்று உத்தரவிட்டேன். அவரும் அதற்கான முயற்சியிலே ஈடுபட்டார்.
இங்கே தொழில் துறை அமைச்சர் தெரிவித்ததுபோல, சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் வெளியூரில் இருக்கிற காரணத்தால், அவரை நேரில் சந்திக்க இயலாததால், டி.ஆர். பாலு, அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.
அவருடன் பேசியபோது, “தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் அனுப்பியிருக்கக்கூடிய கடிதத்திற்கு நிச்சயமாக நாங்கள் மதிப்பு அளிப்போம். கவலைப்பட வேண்டாம்” என்ற ஓர் உத்தரவாதத்தை மத்திய அமைச்சர் சொன்னதாக ஒரு செய்தியை டி.ஆர்.பாலு என்னிடத்திலே தெரிவித்திருக்கிறார்.
ஆகவே, நிச்சயமாக சொல்கிறேன் – முதலமைச்சராக மட்டுமல்ல. நானும் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்தவன். எனவே, இதிலே நான் உறுதியாக இருப்பேன். நீங்களெல்லாம் எப்படி உறுதியாக இருக்கிறீர்களோ, அதைவிட அதிகமாக, அந்த அளவிற்கு நானும் உறுதியாக இருப்பேன். எந்தக் காரணத்தைக் கொண்டும், அதற்கு நிச்சயமாக நம்முடைய தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது.. அளிக்காது.. அளிக்காது என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்’ என்று தெரிவித்தார்.