'கனிமவளக் கொள்ளையை தடுக்காவிட்டால் பட்டினிப் போராட்டம்’ என சிறுமிகள் எழுதிய கடிதம் வைரல்
தென்காசி மாவட்டம் கடையம் பகுதிகளிலிருந்து கனிம வளங்கள் தினந்தோறும் கனரக வாகனங்கள் மூலம் கேரள மாநிலத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது. இதனைத் தடுக்க சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் உறுப்பினரான சந்திரசேகரன் என்பவரின் மகள்கள் சுபபிரியங்கா (11), சபிதா (9) ஆகிய இருவரும் தமிழக முதல்வருக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் "அன்புள்ள ஸ்டாலின் தாத்தா அவர்களுக்கு உங்களுடைய பேர பிள்ளைகள் எழுதும் கடிதம். தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் ஆலங்குளம் பகுதிகளில் அதிகமான கனிமவளத்தைக் கடத்தி செல்கின்றனர்.
போராட்டம் நடத்தியும் பயனில்லை என்று என்னுடைய அப்பா சொல்கிறார். நீங்கள் கனிம வளத்தை காப்பற்றுங்கள். இல்லையென்றால் 14.04.23 தமிழ் வருடப்பிறப்பு அன்று கடையம் சின்னத்தேர் பகுதியில் சாப்பிடாமல் பட்டினிப் போராட்டம் நடத்தப் போகிறோம்" எனக் கூறியுள்ளனர். சிறுமிகள் இருவரும் பட்டினிப் போராட்டம் நடத்தப் போவதாக எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.