‘கொரோனா பரவல் எப்படி உள்ளது?’ - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

‘கொரோனா பரவல் எப்படி உள்ளது?’ - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
‘கொரோனா பரவல் எப்படி உள்ளது?’ - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

பொதுமக்கள் பயம் கொள்ளத் தேவையில்லை.

கொரோனா பரவல் அதிகரித்தாலும், தனி மனித பரவலாகத்தான் உள்ளது. சமூகப் பரவலாக மாறவில்லை என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் தமிழ்நாடு மூலிகை பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்து கழகம் ( டாம்ப்கால்) தயாரித்துள்ள ஆறு அழகு சாதனப் பொருட்களை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகப்படுத்தி வைத்தார்.

இயற்கை பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட ஏடி கூந்தல் தைலம், மூலிகை ஷாம்பு, மூலிகை கூந்தல் பொடி, மூலிகை முகப்பொலிவு பொடி, கூந்தல் தைலம் ப்ளஸ், மூலிகை சோப் (பசுமை & வெண்மை) உள்ளிட்ட பொருள்களை அறிமுகப்படுத்தி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு மூலிகை பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்து கழகம் சார்பில் 11 வகையான அழகு சாதனப் பொருட்கள் வரும் நிதி ஆண்டில் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவோம் என்று கடந்த நிதி நிலை அறிக்கையில் சொல்லி இருந்தோம்.

11 பொருட்களில் முதற்கட்டமாக 6 வகையான பொருட்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இவை இயற்கை முறையைக் கொண்டு தயாரிக்கப்படுவதால் எந்தவித பின் விளைவுகளும் இருக்காது.

டாம்ப்கால் லாபம் ஈட்டும் அமைப்பாக உள்ளது. மூலிகை பொருட்கள் மூலம் தயாரிக்கப்படும் இந்த அழகு சாதன பொருட்கள் எந்தப் பிரச்னையும் இல்லாதவையாக இருக்கும்.

தனியார் கம்பெனிகளில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் இந்தப் பொருட்களை விட 3 மடங்கு அதிகமாக உள்ளது. அரசு சார்பில் தயாரிக்கப்படும் இவை கூடுதல் பாதுகாப்பானது.

தனியார் நிறுவனங்கள் மக்களிடம் ஆசையைத் தூண்டி கூடுதல் விலை கொடுத்து வருகிறது. நானே அதற்கு ஒரு உதாரணம். 1975 ஆம் ஆண்டுகளில் அழகு சாதனப் பொருள் கண்டு மயங்காதவர் இருக்க முடியாது. அந்த இளைய சமுதாயத்தில் நானும் ஒருவனாக இருந்தேன்.

தொடர்ந்து 48 ஆண்டுகளாக அதனைக் காலையும் மாலையும் பயன்படுத்தி வருகிறேன். ஆனால் இன்று வரை சிவப்பாக மாறியதாகத் தெரியவில்லை. இன்னும் கூடுதல் கருப்பாகத்தான் இருப்பதாகத் தெரிகிறது. இருப்பினும், ஏன் பயன்படுத்தி வருகிறீர்கள் என்று கேட்கலாம். தொடர்ந்து பயன்படுத்தியதால் அதைச் செய்யவில்லை என்றால் முகத்தில் முகப்பொறிகள் வந்துவிடுகின்றன.

மேலும் இந்த டாம்ப்கால் அழகு சாதன பொருட்கள் அழகை தருகிறதோ, இல்லையோ நிச்சயம் பக்க விளைவுகள் தராது’ என்று உறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 175 வகையான சித்தா, ஆயுர்வேதா , யுனானி மருந்துகள் தயாரிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மூலிகை சன் ஸ்கிரீன், செறிவூட்டப்பட்ட மூலிகை தைலம், ஹேர் டை உள்ளிட்டவை விரைவில் கொண்டு வரப்படும். 4 கோடி மதிப்பீட்டில் 11 வகையான மருந்துகள் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

தொடர்ந்து, கொரோனா பெருந்தொற்றுக் குறித்துப் பேசியவர், நேற்று இந்திய அளவில் 3000 பேருக்கு மேல் நோய் தொற்றுப் பரவி வருகிறது. தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் 198 என்ற அளவில் பாதிப்பு உயர்ந்துள்ளது. ஓமைக்ரானின் உருமாற்றம் அடைந்த எக்ஸ்.பி.பி தொற்றுப் பரவி வருகிறது.

மத்திய அரசு சார்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் நம்மைத் தற்காத்துக்கொள்ள வேண்டும் என்று இருந்தது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் அறிவுறுத்தல்படி, கடந்த 1ஆம் தேதியில் இருந்து அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, பொதுமுடக்கக் காலகட்டங்களில் பொதுச் சுகாதாரத் துறை சார்பில் விதிமுறைகள் விதிக்கப்பட்டது. அடிக்கடி கை கழுவுவது, தனிமனித இடைவெளி, உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். அவை திரும்பப் பெறப்படவில்லை என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஜப்பான் போன்ற நாடுகளில் கொரோனாவுக்கு முன்பு இருந்து சுற்றுப்புறத்தில் இருந்து பாதுகாக்க முகக்கவசம் அணிவார்கள்.

காவல் துறையினர் அபராதம் விதித்துத் தான் முகக்கவசம் அணிய வேண்டும் என்று இல்லை. முகக்கவசம் அவசியம் என்பதைப் பொதுமக்கள் அறிந்து செயல்பட வேண்டும். நம்மை காத்துக் கொள்ள நல்ல வழி முகக்கவசம் போடுவது அதனைப் பின்பற்றுங்கள்.

கொரோனா தொற்றுச் சமூகப் பாதிப்பாக மாறவில்லை. தனிமனித பாதிப்பு தான் இப்போது உள்ளது. குடும்பம் முழுக்கப் பாதிக்கப்படுவது என்று இல்லை. தொற்று பாதிக்கப்படுபவர்களும் தீவிர சிகிச்சைக்கு அனுப்பப்பட வேண்டிய சூழல் எதுவும் ஏற்படவில்லை. அதனால் பயம் கொள்ளத் தேவையில்லை.

வரும் 10 மற்றும் 11ம் தேதிகளில் மத்திய அரசு சார்பில் மருத்துவக் கட்டமைப்பு தயாராக இருக்கிறதா என்று ஒரு திட்டத்தைத் தொடங்க சொல்லி இருக்கிறார்கள். அன்றைய தினம் ஏதாவது ஒரு மருத்துவமனையில் ஆய்வினை மேற்கொள்ள உள்ளோம் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com