அரசு பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை
திண்டுக்கல்லில் வடிவேலு பட பாணியில் நேற்று பெய்த மழையால் பழுதாகி நின்ற பேருந்தை ’தள்ளு தள்ளு’ எனக் கோஷமிட்டவாறு பயணிகளும், போலீசாரும் பேருந்தை தள்ளி ஓரம் கட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
தென்மாநில பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கில் கிழக்குத் திசை மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாகத் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் திண்டுக்கல் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாகப் பகல் நேரத்தில் கடுமையான வெயில் அடித்து வந்தது. கடந்த சில தினங்களாகத் திண்டுக்கல் நகரில் 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்து வந்தது. வெயிலின் தாக்கத்தால் பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகக் காணப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் குளிர்ந்த காற்று வீச துவங்கியது. இதனை அடுத்து இடி, மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரம் நல்ல மழை பெய்தது.
இதன் காரணமாகச் சாலைகள் மற்றும் தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. வெயிலின் தாக்கத்தில் தவித்து வந்த திண்டுக்கல் நகர் மக்களுக்கு இந்த மழை பெரும் குளிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மழை பெய்து கொண்டிருந்த பொழுது திண்டுக்கல் நாகல் நகர் ரவுண்டானாவில் மதுரையில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு பேருந்து திடீரெனப் பழுதாகி சாலையிலே நின்றுவிட்டது.
பேருந்தில் செல்ப் எடுக்காத காரணத்தினால் என்ன செய்வது என்று ஓட்டுநரும், நடத்துனரும் தவித்துக் கொண்டிருந்தனர். இதனால் அங்குப் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் கொட்டும் மழையில் இறக்கிவிடப்பட்டனர்.
பின்னர் வேறு வழியின்றி அங்குப் பணியில் போக்குவரத்துக் காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து மழையில் நனைந்தபடியே ‘ஏலேலோ.. ஐலசா’ போட்டு வடிவேலு பட பாணியில் தள்ளு தள்ளு எனக் கோஷமிட்டவாறு சிறிது தூரம் வண்டியை தள்ளி ஸ்டார்ட் செய்தனர்.
இதனை அடுத்து அந்தப் பகுதியில் போக்குவரத்து சீரானது. பழுதடைந்த அரசு பேருந்தை பணியில் இருந்த போக்குவரத்து போலீசாரே பொதுமக்கள் உதவியோடு கொட்டும் மழையில் தள்ளி ஸ்டார்ட் செய்த சம்பவம் அவ்வழியே சென்றவர்களைத் திகைப்படையச் செய்தது. மேலும் அரசு பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.