தமிழ்நாடு அரசுக்கு சில கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளனர்
மதுரை அருகே பட்டியல் இன மாணவர்கள் கடையில் மிட்டாய் திருடியதாகக் கட்டிவைத்து தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்துத் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நேரடி கள ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மதுரை மாவட்டம், காரைகேணியைச் சேர்ந்தவர் சிவசந்திரன் மகன் அன்புதாஸ். எம்.வீரபட்டியை சேர்ந்தவர் நாகராஜ் மகன் சக்திவேல். பட்டியல் இனத்தைச் சார்ந்த இவர்கள் இருவரும் திருமங்கலம் வட்டம் அச்சம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.மேலும், அருகில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில், மார்ச் 21ம் தேதி மாணவர்கள் இருவரும் அருகில் உள்ள ஆலம்பட்டிக்கு சென்று அங்குள்ள சந்தோஷ் என்பவரின் கடையில் மிட்டாய் வாங்கியுள்ளனர். கடையில் வாடிக்கையாளர்களும் அதிகமாக இருந்தனர்.அப்போது, கடைக்காரர் திடீரென இரு மாணவர்களையும் மிட்டாய்த் திருடியதாகக் குற்றம் சாட்டி கூச்சல் போட்டுள்ளார்.தொடர்ந்து கடைக்காரரும், அவரது உறவினர்களும் மாணவர்கள் இருவரையும் தூணில் கட்டி வைத்து அடித்துள்ளனர்.
இத்தகவல் அறித்து அனைகரைபட்டியை பூர்வீகமாகக் கொண்ட விடுதி காப்பாளர் விஜயன் ஆலம்பட்டிக்கு வந்து மாணவர்கள் இருவரையும் விடுதியை விட்டு உடனடியாக அனுப்பி விடுவதாகக் கூறியுள்ளார்.இந்த நிலையில், மாணவர் சக்திவேலின் உறவினர் ஒருவர், மாணவர்களைத் தாக்கியவர்களிடம் சமாதானம் பேசி இருவரையும் விடுவித்துள்ளார்.
இச்செய்தி அறிந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் அறிவுறுத்தலின்படி, திருமங்கலம் தாலுகா காவல்துறை,கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் பெற்றுச் சந்தோஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், பட்டியல் இன மாணவர்கள் தாக்கப்பட்ட தகவல் அறிந்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர் செல்லக்கண்ணு, மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் முத்துராணி, மாவட்டத் துணைத் தலைவர் முருகன், ஆதி தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கருப்பசாமி,ஆனந்த மற்றும் மகாலெட்சுமி ஆகியோர் ஆலம்பட்டி கிராமம், அச்சம்பட்டி பள்ளி,ஆதி திராவிடர் நல விடுதி, திருமங்கலம் காவல் நிலையம் ஆகிய இடங்களில் ஏப்.3ம் தேதி ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக, அரசுக்குத் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். அதில், மேற்கண்ட பிரிவுகளோடு எஸ்.சி,எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் படியும் வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும்.குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்திட வேண்டும்.
மாணவர்களை வீட்டிற்கு அனுப்பிய ஆதிதிராவிடர் நல விடுதி காப்பாளர் மீதும் சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.மாணவர்கள் இருவருக்கும் மருத்துவ ரீதியாக ஆற்றுப்படுத்தி(counciling) படிப்பை தொடர்வதற்கு உரிய ஏற்பாடுகள் செய்திட வேண்டும்.
பாதிக்கபட்ட மாணவர்களும், குடும்பத்திற்கும் உரிய பாதுகாப்பும்,நிவாரணமும் வழங்கிட வேண்டும் எனத் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கள ஆய்வுக்குழு தமிழ்நாடு அரசையும்,மாவட்ட நிர்வாகத்தையும் வலியுறுத்தியுள்ளது.