விவசாயிகளைப் பாதுகாப்பதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார்
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், நிலக்கரி எடுக்க அனுமதிக்கப்படாது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சிக்கு சொந்தமான 3 நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகிறது.இதில் 3வது நிலக்கரி சுரங்கத்தின் பெரும் பகுதி காவிரிப் படுகையை ஓட்டி அமைந்துள்ளது.மீதம் உள்ள 6 நிலக்கரி சுரங்கங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் 12 இடங்களிலும், அரியலூர் மாவட்டத்தில் உடையார்பாளையத்திலும் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வேளாண் பாதுகாப்பு மண்டலத்தில் தடை செய்யப்பட்ட சுரங்கங்கள், ஹைட்ரோகார்பன் போன்ற எந்தத் திட்டமாக இருந்தாலும் அவை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம்.
மேலும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை. விவசாயிகளைப் பாதுகாப்பதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார். எனவே யாரும் அச்சப்படத் தேவையில்லை”எனத் தெரிவித்தார்.